“பின்லாந்தும், சுவீடனும் நாட்டோவில் சேர்ந்தால் ரஷ்யா கைகட்டிக்கொண்டிராது,” என்கிறது ரஷ்ய மிரட்டல்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் அத்துமீறல் ஸ்கண்டினேவிய நாடுகளான சுவீடன், பின்லாந்து ஆகியவற்றில் நாட்டோ – அங்கத்துவமா, இல்லையா என்ற கேள்வியை கொதிக்கும் சோறாக்கியிருக்கிறது. பின்லாந்தின் அரசியல் கட்சிகளிடையே படுவேகமாக அதுபற்றிய வாதப்பிரதிவாதங்கள் உண்டாகி அரசு அதுபற்றிய ஒரு முடிவை எடுக்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது. அதனால் பின்லாந்தின் பாதுகாப்பு அமைச்சு வேகமாக நாட்டின் பாதுகாப்பு நிலைமை பற்றிய ஒரு அலசலை மேற்கொண்டு அரசுக்கு ஒரு விபரமான அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது.
இரண்டு நாடுகளிலும் என்றுமே இல்லாத அளவுக்கு மக்களிடையே நாட்டோ அங்கத்துவத்துக்கான ஆதரவு அதிகரித்திருக்கிறது. சுவீடனிலும், பின்லாந்திலும் இதுவரை நாட்டோ அங்கத்துவத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அரசியல் கட்சிகள் தமது நிலைப்பாட்டில் மாறியிருக்கின்றன. சுவீடனில் இவ்வருட இலையுதிர்காலத்தில் நடக்கவிருக்கும் தேர்தலின்போது மக்களிடம் அதற்கு ஆதரவைக் கேட்டு வாக்குச் சேகரிக்கப்போவதாக சுவீடனின் முக்கிய எதிர்க்கட்சி அறிவித்திருக்கிறது. சுவீடனின் ஆளும் கட்சியின் உள்ளே தொடர்ந்தும் நாட்டோ அங்கத்துவம் பற்றிய இரட்டைத்தனம் இருந்து வருகிறது.
பின்லாந்தின் பிரதமர் சன்னா மரீன் தனது நாட்டின் நாட்டோ அங்கத்துவ ஆதரவு பற்றியும் அதுபற்றிய முடிவைப் பற்றியும் சுவீடன் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனுக்குத் தெரிவித்து, அதுபற்றி விவாதிப்பதற்காகப் புதனன்று சுவீடனுக்கு வந்திருந்தார். அச்சமயத்தில் அவர் “வரவிருக்கும் வாரங்களில் பின்லாந்து தனது நாட்டோ அங்கத்துவ விண்ணப்பம் பற்றி முடிவெடுத்திருக்கும்,” என்று பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாகவே பின்லாந்தில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வரும் அவ்விடயத்தில் தனது ஆதரவு நாட்டோ அங்கத்துவம் கோருவதே என்று அவர் பல தடவைகள் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். “பின்லாந்தும், சுவீடனும் எதிர்காலத்திலும் ஒரேவித வெளிவிவகாரக் கொள்கையைக் கொண்டிருக்கவேண்டும்” என்று கூறிய சுவீடிஷ் பிரதமர் மே மாத இறுதியில் சுவீடனும் அதுபற்றிய முடிவு எடுத்திருக்கும் என்று குறிப்பிட்டார்.
இரண்டு நாடுகளின் முடிவுகளும் நாட்டோ அங்கத்துவம் சார்பாகவே இருப்பதைப் புரிந்துகொண்டு வியாழனன்று ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்கால பாதுபாக்குச் சபை உறுப்பினருமான டிமித்ரி மெட்வெடேவ் அந்த முடிவு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு எதிராகக் கணிக்கப்படுகிறது என்று எச்சரித்திருக்கிறார்.
“அவ்விரு நாடுகளும் நாட்டோவில் சேரும்போது அது ரஷ்யாவின் எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. எனவே, நாம் பால்டிக் கடல் பிராந்தியத்தில் எங்கள் பாதுகாப்பு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டிவரும். அதாவது அணுஆயுதம் இல்லாத பால்டிக் கடல் பிராந்தியம் என்ற நிலைப்பாடு எங்களைப் பொறுத்தவரை எதிர்காலத்துக்கு உகந்ததல்ல,” என்று அவர் தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்