சர்வதேச முடக்கங்கள் மொஸ்கோ நகரில் 2 லட்சம் பேரை வேலையில்லாதவர்களாக்கும்.
ரஷ்யாவின் உக்ரேன் மீதான போரின் விளைவாக நூற்றுக்கணக்கான சர்வதேச நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறிவிட்டன. அந்த நிறுவனத்தில் வேலை செய்தவர்களும், அவைகளுக்குத் தொடர்புள்ளவைகளில் ஊழியம் செய்தவர்களுமாகச் சுமார் 200,000 பேர் வேலையிழக்கவிருக்கிறார்கள் என்று மொஸ்கோவின் ஆளுனர் செர்கெய் சொபியனின் தெரிவித்திருக்கிறார்.
தொழில் வாய்ப்புக்களைப் போர் காரணமாக இழந்தவர்களுக்கு உதவுவதற்காக அரசு 41 மில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகளைச் செய்யவிருப்பதாக சொபியனின் தெரிவித்தார். அத்தொகை மூலம் 58,000 பேர் உதவி பெறுவார்கள் என்றும் அவர்களில் சுமார் 12,500 பேர் வேறு துறைகளில் பயிற்சி பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும் வரை பலர் நகரின் பொதுத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் பூங்காக்கள், கட்டடங்கள் போன்றவைகளில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்றும் மேயர் குறிப்பிட்டார். சர்வதேசத்தின் ரஷ்யா மீதான பொருளாதார, வர்த்தக முடக்கங்களின் முழுத் தாக்கத்தையும் ரஷ்யா இன்னும் உணர ஆரம்பிக்கவில்லை என்றும் படிப்படியாக ரஷ்யாவைத் தாக்கவிருக்கும் அவற்றால் ரஷ்யா நீண்டகாலப் பொருளாதார நலிவை அடையும் என்றும் பொருளாதார விற்பன்னர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்