நாட்டை விட்டு வெளியேறத் தண்டிக்கப்பட்டவர்களை கொஸோவோவுக்கு அனுப்ப டென்மார்க் ஒப்பந்தம் தயார்.
முன்பே அறிவித்தபடி பால்கன் பிராந்தியத்திலிருக்கும் கொஸோவோவிடம் சிறைகளில் 300 இடங்களை வாடகைக்கு எடுத்திருக்கிறது டென்மார்க். அந்த இடங்கள் டென்மார்க்கில் குற்றஞ்செய்ததால் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய வெளிநாட்டுக் குற்றவாளிகளுக்காக முன்னிலைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
“இது ஒரு அருமையான செய்தி. ஒரு வழியாக நாம் இனி அவர்களை முடிந்தளவு வேகமாக நாட்டை விட்டுத் துரத்திவிடலாம்,” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் நாட்டின் நீதியமைச்சர் நிக் ஹாக்கருப். வெளிநாடுகளிலிருந்து வந்து டென்மார்க்கில் குற்றஞ்செய்ததால் சிறையும் அதன் பின்னர் நாட்டை விட்டு வெளியேற்றமும் செய்யத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பற்றி அவர் குறிப்பிட்டார்.
இரண்டு நாடுகளின் நீதித்துறைகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம் முடிவாக நாடுகளின் பாராளுமன்றங்களில் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அந்தச் சிறைப்பறவைகளுக்கு கொஸோவோ வழங்கும் சிறை வசதிகள் டென்மார்க்கின் சட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்கும்.
சிறைகளில் வாடகைக்காக 15 மில்லியன் எவ்ரோக்களை வருடாவருடம் டென்மார்க் கொடுக்கும். அதைத் தவிர மேலும் 6 மில்லியன் எவ்ரோக்கள் கொஸோவோவின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக வழங்கப்படும். அடுத்த வருட ஆரம்பத்திலிருந்தே அந்த இடங்களைப் பாவிக்க டென்மார்க் தயாராகிறது.
இதே சமயத்தில் டென்மார்க் தனது நாட்டுக்குள் வந்து அகதியாக வாழ விண்ணப்பம் செய்பவர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப அந்த நாட்டுடனும் பேச்சுவார்த்தை செய்துகொண்டிருக்கிறது. அகதியாக விண்ணப்பம் செய்தவர்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்படுவார்கள். அவர்களுடைய அகதி விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவர்களுக்கான வதிவிடம் ருவாண்டாவாக இருக்கும்.
டென்மார்க்கின் சிறைப்பறவைகள், அகதிகள் பற்றிய குறிப்பிட்ட இரண்டு முயற்சிகளும் நாட்டின் மனித உரிமைகள் குழுக்களால் விமர்சிக்கப்படுகின்றன. கொஸோவோவுக்கும், ருவாண்டாவுக்கும் அனுப்பப்படுகிறவர்களின் மனித உரிமைகள் மீறப்படலாம் என்று அவை கவலை தெரிவிக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்