இந்தியாவின் 14 மாநிலங்களில் வெப்பநிலை 44 செல்ஸியஸைத் தாண்டியது. பக்கவிளைவாக மின்சாரத் தட்டுப்பாடு.
இந்தியா நாட்டின் வெப்பநிலையை அளக்க ஆரம்பித்த காலமுதல் என்றுமில்லாத அளவு வெம்மையை அனுபவித்து வருகிறது. 122 வருடங்கள் காணாத இந்த வெப்ப அலையின் தாக்குதல் மே முதலாம் திகதிவரையாவது தொடரும் என்று வானிலை அறிக்கை எச்சரிக்கிறது. குறிப்பிட்ட ஒரு பாகமென்று இல்லாமல் நாட்டின் சகல பகுதிகளிலும் பரவியிருக்கும் வெப்ப அலை 14 மாநிலங்களில் 44 பாகை செல்ஸியஸைத் தாண்டிச் சாதனை படைத்திருக்கிறது.
உத்தர் பிரதேசத்தில் அல்லாஹாபாத் 45.9 பாகை செல்ஸியஸையும் அதே மாநிலத்தில் மூன்று நகரங்கள் 45 பாகை செல்ஸியஸையும் தொட்டன. அதே அளவு வெப்பநிலையை மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிராவின் சில நகரங்களும் அனுபவிக்கின்றன. சரித்திரத்தின் வெப்பமான நாட்களை டெல்லியும் அனுபவித்து வருகின்றன. தினசரி வெப்பநிலை அங்கே சுமார் 44 பாகை செல்ஸியஸாக இருந்து வருகிறது.
ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், பீகார், ஜாகர்கண்ட், சட்டிகார், தெலுங்கானா, ஒடிஸ்ஸா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களும் மிக அதிக வெம்மையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றன என்கிறது இந்தியாவின் வானிலை அவதானிப்பு நிலையம். மே 2- 4 ம் திகதிகளில் இமாலயத்தை அடுத்துள்ள சில பிராந்தியங்களில் சிறியளவில் மழை பெய்யக்கூடும். அதைத்தவிர ஆங்காங்கே சிறியளவு மழை பெய்யலாம். ஆனால், அடித்துவரும் வெப்ப அலையே பொதுவாகத் தொடரும் என்று எச்சரிக்கப்படுகிறது.
வெம்மை அலையில் ஒரு பக்கவிளைவாக நாடெங்கும் மின்சாரத்துக்கான தேவை அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான மின்சார நிலையங்களில் நிலக்கரியே எரிசக்தியாக இருந்து வருகிறது. அதற்குப் பெரும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. அதன் விளைவாக இந்தியா சரித்திரத்தில் காணாத அளவு மின்சாரத் தட்டுப்பாட்டையும் எதிர்கொண்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்