நான் | கவிநடை
வாழ்க்கை…
என்னுடைய ஆசையை
எப்போதுமே கேட்டதில்லை!
என்னுடைய கனவுகளை
எப்போதுமே
நிறைவேற்றியதில்லை!
அதன் வழியில்
என்னை
அழைத்துச் செல்கிறது!
பெருக்கெடுத்த வெள்ளம்
தனக்குக் கிடைத்த
வழிகளையே
தனது பாதையாக்கிக் கொள்வதுபோல்
நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்!
நான்
செல்லும்பாதை
என்னால்
உருவாக்கப்பட்டது
என்பதைவிட
எனக்காகவே
உருவாக்கப்பட்டதாகவே
நான் தீர்மானிக்கிறேன்!
சமரசம்
செய்து கொள்வதைவிட
நன்மைக்குரியதாய் வேறொன்றும் தெரியவில்லை!
நான்
கனன்று கனன்று
மேல்நோக்கி எழும்
நெருப்பல்ல…
சுழன்று சுழன்று
கீழ்நோக்கிச் செல்லும் நதி!
நான் செல்லும் இடங்களுக்கேற்ப
என்னுடைய நிறமும்
மாறிப்போகிறது!
செம்மண் பூமியில் சிவப்பாகிறேன்!
மணல் வெளியில்
வெண்மையாகிறேன்!
மாற்றம் என்பது
மாற்றமில்லாதது என்றாலும்..
நான் நானாகவே இருக்கிறேன்!
நான் இருக்கும் இடங்களுக்கேற்ப
நான் மாறிப் போகிறேன்!
எதையும் எதிர்பார்த்து
என்னுடைய பொழுதுகளை நான்
விரயமாக்கியதில்லை.
கிடைத்ததையெல்லாம் எனக்குரியதாக
மாற்றிக் கொண்டிருக்கிறேன்!
நான் வீழும்போதெல்லாம்
என்னை
எழுந்து நிற்க வைக்கிறது
ஏதோ ஒன்று!
கிடைக்காமல் போன
எதையும்
எனக்குரியதாக
நான் எண்ணியதில்லை!
என் கைவிட்டுப்போன எதையும்
எப்போதும்
நான் தேடியதில்லை!
எனக்குரியது எதுவோ
அது
எனக்குரியதாகவே இருக்கிறது!
நான்
ஓடுவதற்கு
என்முன் பரந்த பூமி இருக்கிறது!
தன்னைப் பசுமையாக்கிக்கொள்ள
என் வருகையை வரவேற்கும்
அது மட்டுமே
எனக்குப் போதுமானது!
எழுதுவது: பாரதிசுகுமாரன், சென்னை,தமிழ்நாடு