அல்பானியர்கள் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்கிறது ஐக்கிய ராச்சியம்.
ஐக்கிய ராச்சியத்துக்குள் இவ்வருடத்தில் மட்டும் அல்பானியாவைச் சேற்ந்த சுமார் 12,000 அனுமதியின்றி நுழைந்திருக்கிறார்கள். அதனால், கொதித்துப்போயிருக்கும் பிரிட்டிஷ் அரசு அல்பானியா தனது நாட்டு மக்கள் ஐக்கிய ராச்சியத்துக்குள் அனுமதியின்றி நுழைவதைத் தடுக்கவேண்டும் என்று கோரியிருக்கிறது.
ஐக்கிய ராச்சியத்தின் அகதிகளாக அல்பானியர்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அல்பானியாவைச் சேர்ந்த பெண்கள் பலர் பிரான்சில் மனிதக் கடத்தல்கார்களின் கைகளில் அகப்பட்டுக் கடத்தப்பட்டு கடல் வழியாகக் கொண்டு வரப்படுகிறார்கள். அப்படியாக மாட்டிக்கொள்பவர்களில் ஒரு சாராருக்கு ஐக்கிய ராச்சியம் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அகதிகள் அந்தஸ்தைக் கொடுத்து வாழ அனுமதிக்கிறது.
ஆங்கிலக் கால்வாய் வழியாகவே பெரும்பாலான அல்பானியர்கள் வருகிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் 50 ஆக இருந்த அவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் இதுவரை 12,000 ஐத் தாண்டியிருப்பதால் உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரேவர்மான் அதுபற்றிக் கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கப்போவதாகச் சூழுரைத்திருக்கிறார்.
அதனால் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியினருக்கும் பிரேவர்மானுக்கும் இடையே வாய்ச்சண்டைகள் ஏற்பட்டிருக்கின்றன. அல்பானியா ஒரு பாதுகாப்பான நாடு என்று கூறும் பிரேவர்மான் கடல்வழியாக நுழையும் அல்பானியர்கள் பலர் தாம் கடத்தப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடுவது பொய் என்கிறார். அவர்களை பிரிட்டனுக்குள் வாழ அனுமதிப்பது குற்றவாளிக்குழுக்களை நாட்டுக்குள் வரவேற்பது எனறு சாடும் அவர் தொழிலாளர் கட்சி பதவியிலிருப்பின் அவர்கள் எல்லைகளை அல்பானியர்களுக்குத் திறந்துவிடத் தயாரா என்று சவால் விட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்