சூழலுக்கு இணக்கமான தயாரிப்புகளில் முதலீடுகள் செய்வதில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் மோதிக்கொள்ளுமா?
காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கிருக்கின்றன உலக நாடுகள். அதனால் சூழலுக்கு இணக்கமான முறையிலான தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதில் வளர்ந்த நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. அம்முதலீடுகளை ஈர்ப்பதில் ஐரோப்பாவும், அமெரிக்காவும் ஒன்றுடனொன்று போட்டியிட்டு மோதிக்கொள்ளலாம் என்ற அச்சம் இரண்டு பகுதியாராலும் தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்காவின் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சூழலுக்கு இணக்கமான தயாரிப்புகளுக்கு மாறுவதற்கான அரசின் முதலீட்டு உதவிகள் பற்றிய திட்டங்கள் ஐரோப்பிய அரசியல்வாதிகளிடையே பீதியைக் கிளப்பியிருக்கின்றன. அமெரிக்கா அப்படியான தொழில்நுட்பங்களை தமது நாட்டில் தயாரிப்புக்கு ஈர்பதற்காக அமெரிக்கா மான்ய உதவி செய்யவிருக்கிறது. அமெரிக்கச் சரித்திரத்திலேயே மிகப்பெரிய அரச பொருளாதார உதவிகளைக் கொண்ட திட்டங்கள் ஐரோப்பாவின் நிறுவனங்களை அமெரிக்காவுக்குக் கொண்டுபோய்விடும் என்ற அச்சம் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களால் வெளியிடப்பட்டிருக்கின்றன.
அமெரிக்காவின் அந்த நகர்வை எதிர்கொள்ள அமெரிக்கா கொடுப்பதை விட அதிக மான்யத்தைக் காட்டி நிறுவனங்களை ஐரோப்பா ஈர்ப்பதன் மூலம் இரண்டு சாராருக்குமிடையே வர்த்தகப் போர் உருவாகலாம் என்ற அச்சத்தை ஐரோப்பியத் தலைவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அப்படியான நிலைமை உண்டாவதைத் தடுக்க அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த பிரெஞ்ச் ஜனாதிபதி மக்ரோன் அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருக்கிறார்.
ஆஸ்ரேலியா தனது பாதுகாப்புக்காகப் பிரெஞ்ச் நீர்மூழ்கிக் கப்பல்களை கொள்வனவு செய்யத் திட்டமிட்டிருந்தது. கடந்த வருடம் அதற்கிடையே புகுந்து அமெரிக்கா தனது நீர்மூழ்கிக்கப்பல்களை ஆஸ்ரேலியாவுக்கு- விற்க ஒப்பந்தம் செய்துகொண்டதால் பிரான்ஸ் கோபமடைந்து இரண்டு நாடுகளுக்குமிடையே மனக்கசப்பு உண்டானது. அதேபோன்ற நிலைமை அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் உண்டாகி வர்த்தகப் போராகிவிடலாகாது என்பதை அமெரிக்காவுக்கு எடுத்தியம்ப எண்ணுகிறது பிரான்ஸ்.
மக்ரோனின் அமெரிக்க விஜயத்தில் ஐரோப்பிய – அமெரிக்க வர்த்தகத்தில் ஒற்றுமை கொண்டிருப்பது பற்றி விவாதிக்கப்படும் என்று பிரான்ஸ் குறிப்பிடுகிறது. புதன்கிழமையன்று அமெரிக்காவில் இறங்கியிருக்கும் மக்ரோன் வியாழனன்று வெள்ளை மாளிகையில் உத்தியோகபூர்வமாக வரவேற்கப்படுவார்.
வர்த்தக உறவுகள் தவிர, உக்ரேனுக்கான உதவிகள், சீனாவுடனான உறவுகள் எப்படியிருக்கவேண்டும் என்பவையும் மக்ரோனின் விஜயத்தின்போது விவாதிக்கப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்