91 வயதாகும் மாது- பிரிட்டன் முதலாவது கொவிட்-19 தடுப்புமருந்தைப் பெற்றார்.
முன்னாள் நகைக் கடை உதவியாளர் மார்கரெட் கீனன் இன்று செவ்வாயன்று காலை 6.31 மணியளவில் பிரிட்டன் கோவென்ட்ரி பல்கலைக்கழக மருத்துவமனையில் தனது கொவிட்-19 தடுப்புமருந்தைப் பெற்றுக்கொண்டார். 91 வயதான இவர் உலகின் முதல் நாடாக Pfizer-BioNTech நிறுவனத்தின் COVID-19 தடுப்பு மருந்தை புழக்கத்துக்குக் கொண்டுவந்த பிரிட்டனின் முதலாவது ஊசியைப் பெற்றவராகிறார் மார்கரெட்.
தனது திட்டப்படி முதல் கட்டமாக வயது முதிர்ந்தவர்களுக்கும், வெவ்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டதால் பலவீனமானவர்களுக்கும் தடுப்பு மருந்தைக் கொடுக்கப்போவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது ஐக்கிய ராச்சியம்.
இந்த முதல் கட்ட மருந்துகளைப் பெறுபவர்கள் பெரும்பாலும் எண்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். மருத்துவ சேவையாளர்கள் 800,000 பேர்களைத் தொடர்புகொண்டு அவர்களுக்குத் தடுப்பு மருந்து கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. மற்றவர்கள் அனேகமாக அடுத்த வருடம் வரை காத்திருக்கவேண்டும்.
நாட்டின் மஹாராணி எலிசபெத்தும் அவரது கணவரும் முறையே 93, 97 வயதானவர்கள் என்பதால் அவர்களும் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்வார்கள் என்ற செய்திகளைப் பற்றி எதையும் சொல்ல பக்கிங்ஹாம் மாளிகை அதிகாரம் மறுத்துவிட்டது.