சவூதி அரேபியாவின் உபயத்தில் யேமனில் ஒரு புதிய அரசாங்கம்.
நீண்ட காலமாகவே பல பிரிவுகளாகப் பிரிந்து தமக்குள்ளே மோதிக்கொண்டிருக்கும் யேமனில் போரிட்டு வந்த இரண்டு பிரிவினர் ஒன்றிணைந்து புதிய அரசாங்கமொன்றை அமைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்று இதுவரை அரசாங்கமாக இயங்கிவந்த அமைப்பும், நாட்டின் தென் பகுதியில் ஒரு தனிநாடு வேண்டுமென்று கேட்டுப் போராடிவந்த பிரிவினருமே இந்த அரசாங்கத்தில் இணைந்திருக்கின்றனர்.
ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்று ஜனாதிபதியாக இருக்கும் அப்த்-ரபு மன்ஸூர் ஹாதி தொடர்ந்தும் பதவியில் தொடர்கிறார். அமைக்கப்பட்டிருக்கும் 24 அமைச்சர்கள் கொண்ட அரசாங்கத்தில் தென் யேமனில் தனிநாடு கோரிவந்த இயக்கத்தினருக்கும் சமபங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. தென் யேமனில் இயங்கிவந்தவர்களுக்கு எமிரேட்ஸ் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
சவூதியத் தலைநகரில் சர்வதேச ஆதரவுடன் 2019 ம் ஆண்டில் நடாத்தப்பட்ட மாநாட்டில் இந்தச் சமாதான ஒப்பந்தத்துக்கான அடிற்கற்கள் நாட்டப்பட்டன. தொடர்ந்தும் யேமனில் இடையூறாக இருப்பது மேலுமொரு பலம் வாய்ந்த இயக்கமான ஹூத்தி இயக்கத்தினராகும். அவர்களின் பின்னணியிலிருப்பது ஈரானிய அரசின் பலமான ஆதரவாகும்.
2014 முதலே கடும் மோதலில் ஈடுபட்டுவரும் யேமன் போரைத் தூரத்திலிருந்து இயக்குபவர்கள் சவூதி அரேபியாவும் ஈரானுமாகும். ஹூத்திய இயக்கத்தினர் யேமனின் தலைநகரான சனா உட்பட மேலும் சில பகுதிகளை இன்னும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையினால் இந்த நூறு வருட காலத்தின் படு மோசமான அழிவு என்று குறிப்பிடப்படும் யேமன் ஏற்கனவே ஒரு வறிய நாடாகும். போரினால் நாட்டின் பெரும்பாகம் அழிந்து விட்டதால் நாட்டு மக்களுக்கான பெரும்பாலான அத்தியாவசிய தேவைகளை வெளிநாட்டு உதவி நிறுவனங்களே கொடுத்து வருகின்றன. நாட்டின் ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் பாதிப்பேர் போதுமான ஊட்டச்சத்தின்றி வெவ்வேறு நோய்களால் மிகவும் விரைவில் இறக்கக்கூடுமென்ற நிலை யேமனில் நிலவுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்