தமக்கு கொவிட் 19 தடுப்பு மருந்தைப் பெறும் வசதிகளில்லை என்று ஈரான் குறிப்பிடுவது உண்மையல்ல!
“அமெரிக்கா எங்கள் மீது போட்டிருக்கும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளால் எங்கள் மக்களுக்கான கொவிட் 19 தடுப்பு மருந்தை வாங்கக்கூடிய வசதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. அதற்காக டிரம்ப் மீது வசை பாடவேண்டுமென்று” ஈரானிய ஜனாதிபதி சொன்னது உண்மையல்ல, என்கிறது Covax. அவர்கள் அதற்கான கட்டணத்தைச் செலுத்த ஏற்கனவே ஒழுங்குகள் தயாராக இருக்கின்றன என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பினால் உலக நாடுகளுக்கெல்லாம் தடுப்பு மருந்து கிடைக்கும் சந்தர்ப்பத்தை உண்டாக்குவதற்காக ஒழுங்குசெய்யப்பட்ட கொவக்ஸ் திட்டம் மூலம் ஈரான் தனது மக்களின் தேவையில் 50 விகிதத்தைப் பெறுவதற்கான வசதிகள் இருக்கின்றன. மனிதாபிமான விடயமான இது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளையும் மீறிச் செயற்படக்கூடியதே என்று அறிவிக்கப்படுகிறது.
ஈரானுக்கு இருக்கும் இன்னொரு முக்கிய பிரச்சினை தற்போது அங்கீகரிக்கப்பட்டுப் பாவனையிலிருக்கும் தடுப்பு மருந்து Pfizer Biotech என்ற அமெரிக்க நிறுவனத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோலவே அமெரிக்காவில் பாவிக்க ஆரம்பிக்கப்பட்டிருக்கும் [Moderna] இரண்டாவது தடுப்பு மருந்தும் அமெரிக்க நிறுவனத்தின் கண்டுபிடிப்பே. தொற்றுநோய்ப்பரவலின் ஆரம்பகாலத்தில் ஈரானின் தலைவர் ஆயதுல்லா கமேனி “அமெரிக்காவின் மருந்தானால் அது எங்களைக் காப்பாற்ற அல்ல, அழிக்கக்கூடியதாக இருக்கலாம்,” என்று குறிப்பிட்டிருக்கிறார். எனவே அம்மருந்துகளிலொன்றை வாங்கிக்கொள்ள ஈரான் முன்வருமா என்பது ஒரு முக்கிய கேள்வியாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்