“இஸ்ராயேலுடன் நல்லுறவை வளர்க்க விரும்புகிறோம்,” என்கிறார் எர்டகான்.
2018 இல் இஸ்ராயேலிய இராணுவத்தினருடன் மோதிய பலஸ்தீனர்களை இஸ்ராயேல் காஸா பிராந்திய எல்லையில் கொன்றொழித்ததால் துருக்கி தனது தூதுவரை இஸ்ராயேலிருந்து அழைத்துக்கொள்ள இஸ்ராயேலும் பதிலுக்கு அதையே செய்தது.
அதற்கு முன்னர் நீண்ட காலமாக இஸ்ராயேலுடன் நல்லுறவு கொண்டிருந்த நாடு துருக்கியாகும். தொடர்ந்தும் உளவுத்துறை விடயங்களை இரண்டு நாடுகளும் பகிர்ந்துகொள்கின்றன என்பதை நினைவுறுத்திய எர்டகான் உயர்மட்ட நிலையில் தொடர்புகளை உண்டாக்கிக்கொண்டால் இரண்டு நாடுகளுக்குமே நல்லது என்பதைக் குறிப்பிட்டார்.
ஆனாலும், பலஸ்தீனர்களுடன் ஒரு சுமுகமான தீர்வு காணாத பட்சத்தில் துருக்கியால் இஸ்ராயேலுடன் நல்லுறவை வளர்க்க முடியாதென்று அவர் தனது பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார்.
சமீப காலத்தில் அராபிய முஸ்லீம் நாடுகள் ஒவ்வொன்றாக இஸ்ராயேலுடன் நல்லுறவை உண்டாக்கிக்கொள்வதை துருக்கியத் தலைவர் கடுமையாக எதிர்த்து வருகிறார். இஸ்ராயேலுடன் வன்மம் பாரட்டிவரும், காஸா பிராந்தியத்தைத் தனது கைகளுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுடைய தலைவர்களுக்குத் துருக்கி தனது நாட்டுக் கடவுச்சீட்டுக்களைக் கொடுத்து அவர்கள் வேறு நாடுகளில் நடமாட உதவி செய்வதை இஸ்ராயேல் அண்மையில் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
எர்டகானின் இஸ்ராயேல் நல்லுறவுக்கான விருப்பம் பற்றிக் கருத்துத் தெரிவிக்க இஸ்ராயேலிய அரசு மறுத்துவிட்டது. சாள்ஸ் ஜெ. போமன்