இல்-து-பிரான்ஸ் பிராந்தியத் தேர்தலில் பிரபல பெண் ஊடகர் உத்ரேய் புல்வார்!
-இவ்வாறு கூறுகின்றார் பிரான்ஸின் பிரபல பெண் ஊடகவியலாளர் உத்ரேய் புல்வார் (Audrey Pulvar).பிரான்ஸில் பிராந்திய சபைகளுக்கான தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஜூனில் நடைபெறவிருக்கின்றன.
அந்தத் தேர்தலில் பாரிஸ் நகரத்தை உள்ளடக்கிய இல்-து-பிரான்ஸ் (Ile-de-France) பிராந்தியத்தின் எதிரணி வேட்பாளராக உத்ரேய் புல்வார் களமிறங்கப் போகின்றார்.அவரது வேட்பாளர் தெரிவு இன்னமும் உத்தியோகபூர்வமாக இறுதி செய்யப்படவில்லை. எனினும் பசுமைக் கட்சிகளோடு சேர்ந்து பல கட்சிக் கூட்டணி ஒன்றை உருவாக்கி சோசலிஸக் கட்சியின் சார்பில் அதன் பிரதான வேட்பாளராகத் தேர்தலை எதிர்கொள்ளும் ஆயத்தவேலைகளில் அவர் தற்சமயம் ஈடுபட்டிருக்கிறார்.
இல்- து-பிரான்ஸ் பிராந்தியத்தின் தலைவியாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருக்கின்ற வலது சாரி ரிப்பப்ளிக்கன் கட்சியைச் சேர்ந்த வலெரி பெக்றஸ்(Valérie Pécresse) அம்மையாரை எதிர்த்து நிற்கக்கூடிய செல்வாக்குமிக்க சோசலிஸ வேட்பாளராக புல்வார் கருதப்படுகிறார்.
பிரான்ஸின் மார்ட்டினிக் தீவில் (Martinique)1972 இல் பிறந்த உத்ரேய் புல்வார் பிரபல தொலைக்காட்சிகள், வானொலிகள் பலவற்றில் அறிவிப்பாளராக விளங்கியவர். அரசியல் விமர்சகர். பத்தி எழுத்தாளர். கடந்த ஜூனில் நடந்த நகரசபைத் தேர்தலில் பாரிஸ் மாநகர முதல்வர் ஆன் கிடல்கோவின் பட்டியலில் இணைந்து போட்டியிட்டு வென்று தற்சமயம் நகரசபைத் துணை முதல்வர்களில் ஒருவராகப் பதவி வகிக்கிறார்.
பாரிஸ் மேயர் ஆன் கிடல்கோ எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் நாட்டின் அதிபர் தேர்தலில் சோசலிஸக் கட்சி வேட்பாளராக களமிறக்கப்படக் கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் அவரது நெருங்கிய சகாவான உத்ரேய் புல்வார் பாரிஸ் பிராந்தியத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.
அதில் அவர் ஈட்டக்கூடிய வெற்றிவாய்ப்பு அதிபர் தேர்தலில் களமிறங்குவதற்கு ஆன் கிடல்கோவுக்கு ஓர் உந்து சக்தியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன் கிடல்கோவின் நெருங்கிய நண்பியான புல்வார், இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்துக்கான தனது எதிர்காலத் திட்டங்கள் பலவற்றைத் தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்.
பிராந்தியத்தின் பிரஜைகளை உறுப்பினர்களாகக் கொண்ட”மக்கள் நாடாளுமன்றம்”(“citizens’ assembly”) ஒன்றை நிறுவுவதும் அவற்றில் ஒன்று. 100 முதல் 150 வரையிலான மக்கள் பிரதி நிதிகளையும் பொது அமைப்புகளில் இருந்து 50 பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய அந்த மக்கள் நாடாளுமன்றமே பிராந்தியத்தின் சுற்றுச் சூழல்,(environment) உயிரின் பல்வகைமை(biodiversity) போக்குவரத்து விவசாயம், அபிவிருத்தி போன்ற துறைகளில் செய்யப்படவேண்டிய முக்கிய மாற்றங்களை வடிவமைக்கும்.ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் புல்வார் இதுபோன்ற தனது முன்மொழிவுகள் பலவற்றை விவரித்திருக்கிறார்.
இல்-து-பிரான்ஸ் பிராந்தியம் முழுவதும் பொதுப் போக்குவரத்துகளை முற்றாக இலவசமாக்குவது(free Navigo) என்ற தனது முக்கியமான தேர்தல் உறுதி மொழியிலும் அவர் விடாப்பிடியாக இருக்கிறார்.
இணையவழி வியாபார நிறுவனங்கள், சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகின்ற பொருள்கள், சேவைகள் மீது விதிக்கப்படக்கூடிய வரிகள் மூலம் பொதுப் போக்குவரத்துகளை இலவசமாக்குவதற்குத் தேவைப்படும் 2.5 பில்லியன் ஈரோக்களை ஈடுகட்ட முடியும் என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.
இல்-து – பிரான்ஸ் பற்றிய உங்கள் கனவு என்ன என்ற கேள்விக்கு-இந்தப் பிராந்தியத்தில் வசிக்கும் இளைஞர், யுவதிகள் அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும். அவர்கள் நிறத்தால், தோற்றத்தால் மாறுபட்டிருந்தாலும் கனவு காணும் உரிமையை இப் பிராந்தியம் அவர்களுக்கு வழங்கும். அதுவே என் கனவும் – என்று கூறுகிறார் புல்வார்.
குமாரதாஸன். பாரிஸ்.