இஸ்ராயேலில் கொவிட் 19 இறப்புக்களில் ஹாரடிம் யூதர்களிடையே இறந்தவர்கள் விகிதம் மிக அதிகம்.
மிகப் பழமைவாத யூதர்கள், புத்தகவரிகளை வாழ்க்கைக் கோட்பாடுகளாக்கும் யூதர்கள் என்றெல்லாம் குறிப்பிடப்படும் ஹாரடிம் யூத குழுவினர் இஸ்ராயேலிலும், அமெரிக்காவிலும் அதிகமாக வாழ்கிறார்கள்.
தமது நிலத்திலிருந்து விரட்டப்பட்டு உலகமெங்கும் பல நாடுகளிலும் பரந்து வாழும் யூதர்களிடையே “உண்மையான வாழ்க்கைமுறை” அழிந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டு 18 ம் நூற்றாண்டில் எழுந்த அமைப்புக்களில் முக்கியமான ஒன்று ஹாரடிம் யூதர்களாவார்கள். பெரும்பாலும் நெருக்கமாக வாழ்வதும், வெளியாரிடம் உறவுகள் வைத்துக்கொள்ளாமல், அரசாங்கத்தை அதிகம் நம்பாமல், யூத கோட்பாடுகள் சமூகச் சட்டங்களாக்கப்படவேண்டுமென்று அரசியல் செய்து வாழ்பவர்கள் ஹாரடிம் யூதர்கள்.
குடும்பக்கட்டுப்பாடுகள் செய்துகொள்வதைப் பாவமாக எண்ணும் இவர்களிடையே ஒப்பீட்டளவில் பிறப்புக்கள் மிக அதிகம்.
இஸ்ராயேலில் எடுத்த கணிப்பீட்டுக்களின்படி 65 வயதுக்கு அதிகமான ஹாரடிம் யூதர்களில் ஒவ்வொரு 132 பேருக்கும் ஒருவர் கொவிட் 19 ஆல் இறந்திருப்பதாகத் தெரிகிறது. மற்றைய குடிமக்களிடையே 65 க்கு மேற்பட்டவர்களில் 475 பேருக்கு ஒருவரே இறந்திருக்கிறார்கள்.
நெருக்கமாக வாழும் ஹாரடிம் யூதர்கள் இஸ்ராயேல் அரசின் கொரோனாக் கட்டுப்பாடுகளெவையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. தமது சமூகத்தினருடன் வழக்கம்போலவே பழகி, கொண்டாட்டங்களிலும் எப்போதும்போலவே பங்கெடுத்து வந்தார்கள்.
ஆனால், தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்வதில் ஹாரடிம் யூதர்கள் முன்னணியில் இருப்பதாக இஸ்ராயேல் அரசு தெரிவிக்கிறது. பொதுவாகவே தடுப்பு மருந்தைப் பற்றிய சந்தேகங்கள் கொண்ட மற்றைய நம்பிக்கையுள்ளவர்களை விட ஹாரடிம் யூதர்கள் பெரும்பான்மையாக தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்