20,000 – 50,000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த காண்டாமிருகத்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
ரஷ்யாவின் மிக வடக்கில் சைபீரியப் பகுதியில் நிரந்தரமாக உறைந்து கிடக்கும் நிலம் [permafrost] இளகி வரும் பகுதியொன்றில் மிகவும் பழைய காலத்தில் வாழ்ந்த ஒரு காண்டாமிருகத்தின் உடல் பெரும்பாலான பாகங்கள் அழியாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கம்பளி காண்டாமிருகம் என்று அழைக்கப்படும் இந்த மிருகத்தின் உள்ளிருக்கும் பாகங்கள் பலவும் உறைந்திருந்த நிலத்தில் இதுவரை பாதுகாக்கப்பட்டிருந்ததால் சிதையாமல் இருக்கின்றன. உலகில் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றத்தால் ரஷ்யாவின் வடக்கு, மேற்குப் பாகங்களிலிருக்கும் இப்படியான நிலப்பிரதேசம் இளகிவருவதால் சமீபத்தில் இதுபோன்ற காண்டாமிருகங்களும், வேறுவிதமான பாரிய மிருகங்களின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கம்பளிக் காண்டாமிருகம் கண்டுபிடிக்கப்பட்ட இதே திரெத்யாக் நதி பகுதியில் 2014 இல் இதே போன்ற மேலுமொரு காண்டாமிருக உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உள் உடல் பாகங்களும் பரிசோதனைக்குட்படுத்தப்படக்கூடிய நிலைமையில் இருப்பதால் அந்தக் காலம் பற்றிய பல விடயங்களை அதை அராய்ச்சி செய்வதன் மூலம் புரிந்துகொள்ளலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
சாள்ஸ் ஜெ.போமன்