கொவிட் 19 உதவிகளுக்கான நிதியில் கொள்ளையடித்துப் பிடிபட்ட இந்தோனேசிய அமைச்சர்கள்.
கொவிட் 19 காலத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் வெவ்வேறு நிறுவனங்களிடம் கொள்வனவு செய்தபோது அந்த ஒப்பந்தங்கள் செய்வதற்காக அந்த நிறுவனங்களிடமிருந்து சுமார் 1.2 மில்லியன் டொலர்களைக் கையூட்டாக வாங்கியதற்காக இந்தோனேசியாவின் சமூக சேவை அமைச்சர் பத்துபாரா நாட்டின் லஞ்ச ஊழல் கண்காணிப்பு திணைக்களத்திடன் சரணடைந்திருக்கிறார்.
அரசாங்கத்துக்காக சுமார் 490 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அடிப்படை உணவுப்பொருட்களைக் கொள்வனவு செய்தபோது விநியோகிக்கப்படும் ஒவ்வொரு உணவுப் பொட்டலத்துக்காகவும் இந்த அமைச்சர் தனது பங்குக்கு 0.7 டொலர்கள் பெறுமதியான பணத்தையோ, பொருளையோ பெற்றுக்கொண்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அமைச்சருடன் இவ்விடயத்தில் மேலும் இரண்டு உத்தியோகத்தர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
நாட்டில் ஒரு சுத்தமான அரசைத் தருவேன் என்ற உறுதிமொழியுடன் பதவிக்கு வந்த யுகோ வுடூடோவின் அரசில் லஞ்ச ஊழலுக்காகக் கைது செய்யப்படும் மூன்றாவது சமூக சேவை அமைச்சர் இவராகும். இவருக்கு முதல் இதே பதவியிலிருந்த இருவரும் ஏற்கனவே தண்டிக்கப்பட்டுச் சிறையிலிருக்கிறார்கள்.
கடந்த இரண்டு வாரங்களில் பத்துபாராவுக்கு முன்னரே நாட்டின் கடற்தொழில்துறை அமைச்சர் எடி பிரபோவோ வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யும் அனுமதிகளில் லஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டுக்காகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.