பெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்காக லெபனானின் பிரதமர் மற்றும் மூன்று அமைச்சர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணை
ஆகஸ்ட் மாதத்தில் லெபனானின் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்து, தீ விபத்துக்கள் லெபனானின் பிரதமர் ஹஸன் டியாப், மற்றும் மூன்று அமைச்சர்களின் அலட்சியத்தால் நூற்றுக்கணக்கானவர்களின் உயிரைக் குடித்து மேலும் பலரைக் காயப்படுத்தியது என்று குற்றஞ்சாட்டப்பட்ட அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர்கள் காஸி ஸாய்த்தர், யூசெப் பெனியானோஸ் மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சர் அலி ஹஸன் கலீல் ஆகியோரே மற்ற அமைச்சர்கள்.
கடந்த ஓரிரு வருடங்களாகவே லஞ்ச ஊழல்களால் மிகப் பெரும் அரசியல் கொந்தளிப்புக்களைச் சந்தித்துவரும் லெபனானின் பிரதம மந்திரியின் காரியாலயமோ இக்குற்றத்தை விசாரிக்கும் நீதிபதி பாதி ஸவானுக்கு நாட்டின் உயர் பதவிகளிலிருக்கும் அமைச்சர்களை விசாரிக்கவோ, குற்றஞ்சாட்டவோ அதிகாரமில்லை என்றும் அவ்விசாரணைகளுக்குப் பிரதமர் ஒத்துழைக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
பல வருடங்களாகவே வெடிக்கக்கூடிய இரசாயணப் பொருட்களை பெய்ரூட் துறைமுகத்தில் பாதுகாத்து வந்ததால் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தில் 200 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டு சுமார் 6,000 க்கும் அதிகமானவர்கள் காயப்பட்டார்கள். பிரதமர் ஹஸன் டயாப் சமீபத்தில் பதவியேற்றவர், விரைவில் பதவி விலகவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்