இராணுவ அராஜகத்துக்கு எதிரான நிலைப்பாடு மியான்மாரில் மக்களை ஒன்றுபட வைக்கிறது.
ஒரே நாளில் 38 பேரைச் சுட்டுக் கொன்ற பிறகு டிக் டொக்கில் இராணுவத்தினர் வெவ்வேறு ஆயுதங்களை மக்களுக்குக் காட்டி “உன்னை வீதியில் கண்டால் இதனால் கொன்று விழுத்துவேன்,” என்று மிரட்டியும் கூட நாளாந்தம் மக்கள் திரும்பவும் வீதிகளுக்கு வந்து தமது எதிர்ப்பைக் காட்டத் தயங்கவில்லை. “பின்வாங்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை, எங்கள் போராட்டம் தொடரும்,” என்று சாமான்ய மக்கள் உற்சாகத்துடன் சொல்கிறார்கள்.
இதுவரை சுமார் 60 பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமது குறியில் மனம் தளராதவர்களால் உந்தப்பட்டு மியான்மாரின் வெவ்வேறு இன மக்களும் ஒன்று சேர்ந்து தமது ஒற்றை எதிரியான இராணுவத்தை நோக்கி அமைதியான முறையில் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். மியான்மார் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை இனத்தவரின் எண்ணிக்கை மட்டுமே 135 ஆகும். தனது கையில் ஆட்சியைக் கொண்டிருக்கும் காலத்தில் சிறுபான்மையினர்களைக் கொடுமையான நடவடிக்கைகளால் அடக்கி வைத்துப் பிரித்தாண்டு வந்தது இராணுவம். இதனால், மீண்டும் இராணுவத்தின் கையில் ஆட்சியைக் காண எவரும் விரும்பவில்லை.
ஒரு பக்கத்தில் இராணுவத்தின் ஆட்சிக் கைப்பற்றுதலை ஆதரிக்கும் புத்த பிக்குகள் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க, இன்னொரு பகுதிப் பிக்குகள் மக்களுடைய போராட்டங்களில் இணைந்து வருகிறார்கள். அதைத் தவிர கடந்த ஓரிரு நாட்களில் மட்டும் மியான்மாரின் இராணுவ, பொலீஸ் ஊழியர்களிலிருந்து சுமார் 600 பேர் விலகி மக்களுக்கு ஆதரவாக ஊர்வலங்களில் பங்குகொள்கிறார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
இராணுவ அரசின் தவறை எதிர்த்து மக்களுக்கு ஆதரவளிப்பவர்களில் மியான்மாரின் பெரிய நகரான யங்கூனின் உயர் பொலீஸ் அதிகாரி மின் துன் குறிப்பிடத்தக்கவர். “தனது சொந்த மக்களின் மீது அராஜகங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் ஒரு தலைமையின் கீழ் நான் பணியாற்ற மாட்டேன், இனிமேல் மக்களின் பக்கம் நிற்பேன்,” என்கிறார் அவர்.
மியான்மாரின் மொத்த இராணுவ, பொலீஸ் அதிகாரிகள் 600,000 விட அதிகம். அவர்களில் 600 பேர் என்பது பெரிய தொகையாக இல்லாவிட்டாலும் சொந்த மக்களை அடித்து நொறுக்கிக் கொல்வதை எதிர்த்து அந்த அதிகாரங்களிடையே குரல் கொடுப்போர் இருக்கிறார்கள் என்பதை இது நிரூபிக்கிறது. விலகியவர்கள் தமது விலகலுக்கு அதையே காரணமாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
“பாதுகாப்புக் கடமையிலிருந்து விலகியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்று மியான்மார் அரசு குறிப்பிட்டிருக்கிறது. சுமார் 20 பாதுகாப்பு அதிகாரிகள் இந்திய எல்லையூடாக இந்தியாவுக்குள் நுழைந்து அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார்கள். அவர்களைத் திருப்பியனுப்பும்படி மியான்மார் இராணுவம் கோரியிருக்கிறது.
பதவிகளை விட்டு விலகியவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்களின் வீடுகளில் சோதனைகள் நடாத்திவருகிறது மியான்மார் இராணுவம். அப்படியான சோதனைகளின்போது வீடுகளுக்குள் அதிரடியாகப் புகுந்து அராஜகங்கள் செய்யப்படுவதாக உள்ளூர் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்