எண்ணூறு வருடங்களுக்குப் பின்னர் விழித்தெழுந்த ஐஸ்லாந்தின் எரிமலையில் மீண்டுமொரு பிளவு.
ஐஸ்லாந்தின் பெரும்பாலான மக்கள் வாழும் பகுதியான ரெய்க்காவிக்குடாநாட்டுப் பகுதியிலிருக்கும் எரிமலையொன்று இரண்டு வாரங்களுக்கு முன்னால் துகிலெழுந்து தனது எரிகுழம்பையும், கற்களையும், ஆவியையும் வீசிவருகிறது. கடந்த முறை 800 வருடங்களுக்கு முன்னர் வெடித்துப் பரவிய இந்த எரிமலை 30 வருடங்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தது.
திங்களன்று நாட்டின் பெரிய விமான நிலையமான கெவ்லாவிக்கின் நிர்வாகத்தூபியிலிருந்து கவனித்தபோது எரிமலையில் மேலுமொரு வெடிப்பு ஏற்பட்டிருந்ததைக் கவனிக்க முடிந்தது. அதன் அளவு சுமார் 500 மீற்றர் என்று குறிப்பிடப்படுகிறது.
அந்த வெடிப்பு உடனடியாக எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று கணிக்கப்பட்டாலும் அப்பகுதியில் வாழும் மக்கள் சிலரை அங்கிருந்து வேறிடங்களுக்கு அகற்றப்படும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
ஐஸ்லாந்தின் அதிகாரிகளுக்கு மேலுமொரு பிரச்சினையை அந்த எரிமலையைப் பார்க்கப் புறப்பட்டுப் போகும் சுற்றுலாப்பயணிகள் ஏற்படுத்தி வருகிறார்கள். எரிமலையானது எத்தனை காலம் தொடர்ந்து செயற்படப்போகிறது, அதன் இயக்கங்கள் எப்படியிருக்கும் என்று கணிப்பிட முடியாத நிலையில் அதனருகே போவது ஆபத்தானது என்று எச்சரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மக்கள் போகாமல் தடைசெய்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்