ஈத் பெருநாள் கொண்டாடும் இரண்டாம் நாளில் பள்ளிவாசலுக்குள் குண்டுவைத்தது “நாமே” என்கிறது ஐ.எஸ் இயக்கம்.
வெள்ளியன்று காபுலிலிருக்கும் ஷகார் தாரா பகுதிப் பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 12 பேர் இறந்தார்கள். ஈத் பெருநாளுக்காக மூன்று நாட்கள் ஆப்கான் அரசுடன் போரநிறுத்த ஒப்பந்தம் அறிவித்திருந்த தலிபான் இயக்கத்தவர்கள் அதைத் தாம் செய்யவில்லை என்று மறுத்திருந்தனர். சிறுபான்மையினரான ஹசாராக்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்களை நடாத்திவருவதில் தலிபான்களும், ஐ.எஸ் அமைப்பினரும் ஒரே மாதிரியானவர்களே.
ஆப்கானிஸ்தானில் பெரும்பான்மையான பஷ்டூன் இனத்தவர்களைக் கொண்ட தலிபான் இயக்கத்தினர், ஐ.எஸ் அமைப்பினர் இஸ்லாத்தின் சுன்னி மார்க்கத்தினராகும். மற்றைய மார்க்கத்தினரையும் ஒழித்துக்கட்டி ஒரு “சுன்னி இஸ்லாமியக் கோட்பாட்டிலான” ஆட்சியே அவர்களுடைய கனவாகும்.
ஒரு வாரத்துக்கு முன்னர் ஹஸாரா மக்கள் வாழும் பகுதியிலிருக்கும் சிறுமிகள் பாடசாலையை அடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன. அதனால் இறந்தவர்கள் தொகை 50 க்கும் அதிகமாகியிருக்கிறது. சில நூறு பேர் காயமடைந்தார்கள். இதுவரை அதற்கான பொறுப்பை எவரும் எடுக்கவில்லை. சமீப வருடங்களில் ஆப்கானிஸ்தானில் நடாத்தப்பட்ட மிகவும் மோசமான விளைவுகளான தாக்குதல் அதுவே என்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்