ஆபத்தான ஆறு கைதிகள் இஸ்ராயேலின் சிறைச்சாலைக்குள்ளிருந்து தப்பினார்கள்.
இஸ்ராயேலின் வடக்கிலிருக்கும் கில்போவா சிறையிலிருந்து பாலஸ்தீனக் கைதிகள் ஆறு பேர் சுரங்கமொன்றைத் தோண்டித் தப்பிசென்றிருப்பதாக இஸ்ராயேல் அறிவிக்கிறது. திங்களன்று அதிகாலையில் சிறைச்சாலையை அடுத்துள்ள பகுதியில் சந்தேகத்துக்குரிய நபர்களைக் கண்டதாகச் சிலர் தெரிவித்ததை அடுத்தே சிறைக்குள்ளிருந்த கழிவு நீர் வழியையொட்டி ஒரு சுரங்கத்தைத் தோண்டி அவர்கள் தப்பியிருப்பதாகத் தெரியவந்தது.
மிகவும் ஆபத்துக்குரியவர்கள் என்று குறிப்பிடப்படும் அவர்கள் அதி பாதுகாப்புள்ள் அந்தச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் தப்பியதை அடுத்து பொலீசார், இரகசியப் பொலீசார் மற்றும் இராணுவத்தினர் தப்பியோடியவர்களைத் தேடி வலைவிரித்திருக்கிறார்கள். இஸ்ராயேல் சரித்திரத்திலேயே மோசமான தப்புதல் என்று அது குறிப்பிடப்படுகிறது.
ஸக்கரியா ஸுபெய்தி என்ற பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஆயுதப் பிரிவின் முக்கிய தலைவர் அவர்களில் ஒருவர் என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் நால்வர் இஸ்ராயேலியர் மீது பல தாக்குதல்களை நடாதியதற்காக ஆயுள் தண்டனை பெற்றவர்களாகும். ஆறாவது நபரும் இஸ்ராயேலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவே சிறையிலிடப்பட்டவராகும்.
சிறையின் வெளியிலிருந்து உதவிபெற்றே அவர்கள் தப்பியோடியிருக்கவேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சிறையிலிருக்கும் ஆபத்தான கைதிகளை தற்காலிகமாக வேறு சிறைக்கு மாற்றும் திட்டம் யோசிக்கப்படுகிறது.
அவர்கள் ஆறு பேரும் தப்பிய விடயம் பாலஸ்தீனப் பகுதியில் கொண்டாட்டத்துக்குரிய செய்தியாகியிருக்கிறது. ஹமாஸ் இயக்கத்தினர் “தப்பியவர்களின் வீரச்செயல் போற்றுதலுக்கு உரியது,” என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சாள்ஸ் ஜெ. போமன்