இத்தாலிக்கு எரிவாயு விற்பனை செய்யும் முக்கிய நாடாகியது அல்ஜீரியா.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களைக் கொள்வனவு செய்வதை நிறுத்த வேண்டும் என்ற குரல் ஒன்றியத்துக்குள்ளேயும் பலமாக ஒலிக்கின்றன. எனவே தொடர்ந்தும் ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யும் எரிபொருட்களைத் தமக்கு விற்கக்கூடிய நாடுகளை வேட்டையாடி வருகின்றன ஐரோப்பிய நாடுகள் சில. சமீபத்தில் ஜேர்மனி திரவ எரிவாயுவைக் கத்தாரிடம் வாங்கும் உடன்படிக்கையைச் செய்துகொண்டது. ரஷ்ய எரிவாயுவில் பெரிதும் தங்கியிருக்கும் இன்னொரு நாடான இத்தாலி திங்களன்று அல்ஜீரியாவைத் தமது முக்கிய எரிவாயு விற்பனையாளராக்கும் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது.
“உக்ரேனுக்குள் ரஷ்யா தனது ஆக்கிரமிப்பை ஆரம்பித்த உடனேயே ரஷ்யாவிடமிருந்து எரிவாயுக் கொள்வனவை நிறுத்தும் வழியை வேகமாக நாடுவேன் என்று குறிப்பிட்டிருந்தேன். இந்த ஒப்பந்தம் அதன் ஒரு படியாகும். இது போன்ற நடவடிக்கைகள் தொடரும்,” என்று அல்ஜீரிய ஜனாதிபதி அப்துல்மஜீத் தப்பூனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய இத்தாலியப் பிரதமர் மாரியோ டிராகி தெரிவித்தார்.
அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாகவும், நாட்டோவின் நட்பு நாடாகவும் இருக்கும் இத்தாலிக்குத் தனது எரிவாயுப் பாவனையில் 40 % க்காக ரஷ்யாவில் தங்கியிருப்பது ஒரு தலைவலியாக இருந்து வந்தது. 2024 வரை இத்தாலிக்கான பெருமளவு எரிவாயுவை அல்ஜீரியா விற்பனை செய்யும். இதன் மூலம் இத்தாலி தனது ரஷ்ய எரிவாயுக் கொள்வனவை 40 % லிருந்து 20 % ஆகக் குறைக்க முடியுமேயன்றி நிறுத்த முடியாது.
அடுத்த வாரம், இத்தாலியப் பிரதமர் மொசாம்பிக், அங்கோலா, கொங்கோ ஆகிய நாடுகளுக்கும் எரிபொருட்களைக் கொள்வனவு செய்யப் பேச்சுவார்த்தைகளுக்காக விஜயம் செய்யவிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்