மலேசிய மன்னர் நாட்டின் பிரதமர் முஹ்யிதீன் யாசின் மற்றும் அமைச்சரவையின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.
பதினேழு மாதங்களாகப் பல அரசியல் இழுபறிக்குள் மலேசியாவை ஆண்டுவந்த முஹ்யிதீன் யாசின், மன்னர் சுல்தான் அஹ்மத் சுல்தான் அபுதுல்லா ஷாவைத் சந்தித்து தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் பாராளுமன்றத்தின் கீழ்ச்சபையில் தனது ஆட்சிக்கான பெரும்பான்மையை இழந்ததாலேயே யாசின் பதவியிலிருந்து இறங்கினார்.
கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் மிகச் சிறிய பெரும்பான்மை ஆதரவு மூலம் ஆட்சியில் இருந்து வருகிறார் முஹ்யிதீன் யாசின். அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டில் நடந்த தேர்தலில் பதவிக்கு வந்தவர் தற்போது 96 வயதான மஹாதிர் முஹம்மது. 1981 – 2003 வருடங்களில் தொடர்ந்து பிரதமராக இருந்து அரசியலிலிருந்து விலகிய மஹாதிர் முஹம்மது 2009 இல் பிரதமராகிய நஜீப் ரஸாக்கின் பதவிக்காலத்தில் அவர் செய்த ஊழல்களால் நாட்டிலேற்பட்ட அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகச் சொல்லி மீண்டும் 2018 தேர்தலில் நின்று வெற்றிபெற்றார்.
அரசியல் நிலைமை சீரானதும் பதவியை விட்டு விலகுவதாகக் குறிப்பிட்டு 222 பாராளுமன்ற இடங்களில் 122 ஐ வென்று பிரதமராகிய மஹாதிரின் கூட்டணி நீண்ட காலம் நிலைக்கவில்லை.
அவரது கூட்டணிகளுக்குள்ளேயும் பதவி இழுபறி, எதிர்க்கட்சிக் கூட்டணிக்குள்ளும் பிளவுகள் என்று மலேசியாவின் அரசியலில் நிலையில்லாமல் இருந்தது. அதற்குள்ளே புகுந்து தான் பிரதமராகினார் முஹ்யிதீன் யாசின். ஆனால், பாராளுமன்றத்தில் தனக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிந்து சமயத்தில் நாட்டில் பரவிவந்த கொவிட் 19 ஆல் ஏற்பட்ட நிலைமையைப் பாவித்து அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தி ஆண்டுவந்தார்.
மலேசியாவில் கொவிட் 19 பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர யாசின் அரசால் இயலவில்லை. அது சுமார் 1.1 மில்லியன் பேரிடையே தொற்றி இதுவரை 12,500 பேரைக் கொன்றிருப்பதாக உத்தியோகபூர்வமான தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், நாட்டில் அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்து எதிர்க்கட்சிகளுக்கோ, மக்களுக்கோ உண்மையான விபரங்களைத் தெரியப்படுத்தாமல் பிரதமர் மறைப்பதாகக் கடும் விமர்சனம் எழுந்து பரவியிருக்கிறது.
தவிர, தடுப்பு மருந்துகளுக்கான பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. சீனாவின் தடுப்பு மருந்துகளை முதலில் வாங்குவதாக முடிவுசெய்து அவைகளின் பலன் எப்படியாகும் என்ற சந்தேகத்தில் அவற்றை நிறுத்தினார் யாசின். பைசர் பயோன்டெக் நிறுவனத்திடம் 46 மில்லியன் தடுப்பு மருந்துகள் வாங்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், அவை தற்போதைக்குக் கிட்டாது என்ற நிலைமையில் நாட்டில் கொண்டுவரப்பட்ட பொது முடக்கங்களால், கட்டுப்பாடுகளால் பலரின் வாழ்வாதாரமும் தகர்ந்திருக்கிறது.
ஆகஸ்ட் 1 ம் திகதியுடன் அவசரகால நிலைமை காலாவதியடைந்தது. மக்களின் விமர்சனம், அரசியல் ஆதரவாளர்கள் விலகுதல், அரசரின் கோபம் எல்லாவற்றையும் எதிர்த்து நிற்க முடியாமல் பதவி விலகியிருக்கிறார் யாசின்.
சாள்ஸ் ஜெ. போமன்