யஸீதியர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி ஈராக்கிய அரசிடம் கோரிக்கை.

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் இஸ்லாமியக் காலிபாத் அமைப்பதற்காகக் காட்டுமிராண்டித்தனமாகப் போரிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் கூட்டமாக அழித்த இனங்களில் ஒன்று யஸீதியராகும். இவர்கள் ஈராக்கில் சிஞ்யார் மலைப்பிராந்தியத்தில் குர்தீஷ் மக்களிடையே வாழ்ந்து வந்தார்கள். பழங்குடியினரான யஸீதியர்கள் சரித்திரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கூட்டங்கூட்டமாக அழிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.

சிஞ்யார் மலைப்பிராந்தியத்தை முற்றுக்கையிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் சில ஆயிரம் யஸீதிகளைக் கொன்று, சுமார் பத்தாயிரம் பெண்களையும், சிறுமிகளையும் கடத்திச் சென்று தங்களது பாலியல் அடிமைகளாகவும், வீட்டு வேலைக்கும் வைத்திருந்தார்கள். அப்பெண்களை பண்டங்களாக தமக்கிடையே விற்று – வாங்கினார்கள். 

ஈராக்கின் பழங்குடிகளான யஸீதியர்கள் முஸ்லீம்களல்ல, அவர்கள் வழிபடும் தெய்வம் சாத்தான் என்ற காரணங்களால் அவர்களை மனிதர்களாக நடத்தலாகாது என்று கருதினார்கள் ஐ.எஸ் தீவிரவாதிகள். அவர்களிடமிருந்து தப்பிய சில யஸீதியர்கள் மூலம் உலகத்துக்கு உண்மை தெரியவந்தது. அப்படியாகப் பாலியல் அடிமையாக நடாத்தப்பட்டு விடுதலையடைந்த நதியா முராட் 2018 இல் நோபலின் அமைதிப்பரிசைப் பெற்றார்.

அமெரிக்காவும் நட்பு நாடுகளும் யஸீதியர்களுக்குப் பாதுகாப்பளித்தன. போரில் புலம்பெயர்ந்து ஐரோப்பா, அமெரிக்கா போன்ற இடங்களில் இன்று பல யஸீதியர்கள் வாழ்கிறார்கள்.

ஈராக் பிராந்தியத்தில் வாழும் யஸீதியர்கள் போரிலிருந்து தப்பினாலும் சமூக ரீதியிம் மிகவும் பாதிப்படைந்திருக்கிறார்கள். போர்க் கைதிகளாக, அடிமைகளாக இருந்து தப்பிவந்த அப்பெண்களை அவர்களது சமூகமே ஒதுக்கிவைத்துவருகிறது. அத்துடன் தாம் வாழ்ந்து வந்த பிராந்தியத்திலிருந்து புலம்பெயர்ந்து வேறிடங்களிடையே வாழ்பவர்களும் பின் தங்கிய நிலையிலேயே வாழ்கிறார்கள். 

பல உள் நாட்டுப் பிரச்சினைகளிலும், பொருளாதாரச் சிக்கல்களிலும் மாட்டியிருக்கும் ஈராக் அரசு யஸீதியர்களுக்கு என்று உதவிகளெதுவும் திட்டமிட்டுச் செய்வதில்லை. அங்கிருக்கும் மனிதாபிமான அமைப்புக்களே யஸீதியர்களுக்கு உதவிவருகின்றன. அப்படியான குழுக்களிடமிருந்தே யஸீதியர்களுக்கு உதவும்படி குரலெழுப்பப்பட்டிருக்கிறது.

ஜனவரியின் பத்து நாட்களில் மட்டும் 11 யஸீதியர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். 2020 இல் சுமார் 250 பேருக்கும் அதிகமான யஸீதியர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் உயிரை மாய்த்துக்கொள்பவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். 

போர்க்காலத்தின் வேதனையான நினைவுகள் யஸீதியர்களின் சமூகத்தின் மீது கடுமையாகத் தாக்கியிருப்பதாகக் குறிப்பிடுகிறார் மனோதத்துவ நிபுணர் கிஸில்ஹான் [Dr Jan Ilhan Kizilhan]. எல்லையில்லாத மருத்துவர்கள் அமைப்பு போன்ற மனிதாபிமான அமைப்புக்களுடன் சேர்ந்து பணியாற்றும் இவர் ஆயிரக்கணக்கான யஸீதியர்களை ஜேர்மனி உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு மருத்துவ உதவிக்காக அனுப்பியிருக்கிறார். நோபல் பரிசு பெற்ற நதியா முராடை ஜேர்மனிக்குச் சிகிச்சைக்காக அனுப்பியவரும் இவரே. “மிகவும் சிறுபான்மை இனமான யஸீதியர்களிடையே ஏற்பட்டு வரும் இழப்புக்களைத் தடுக்க ஈராக் அரசு உதவவேண்டும். இல்லையென்றால் இவர்களுடைய இனமே மெதுவாக அழிந்துவிடும்,” என்று எச்சரிக்கிறார் அவர். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *