100 க்கும் அதிகமான நாடுகள் காடுகளை அழிப்பதை 2030 ல் நிறுத்துவதாக ஒப்பந்தம் செய்துகொள்கின்றன.
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் ஆரம்பித்திருக்கும் காலநிலை மாற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கான உச்சி மாநாட்டில் முதலாவது ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருக்கிறது. ரஷ்யா, பிரேசில், கனடா, இந்தோனேசியா உட்பட 100 க்கும் அதிகமான நாடுகள் தாம் 2030 அளவில் காடுகளை அழிப்பதை நிறுத்துவதாக உறுதிப்படுத்தவிருக்கின்றன. அவ்வொப்பந்தத்தில் ஈடுபடும் நாடுகள் உலகின் 85 % காடுகளைக் கொண்டிருக்கின்றன.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பிரதிநிதிகள் சுமார் 20 பில்லியன் டொலர்களைஅழிக்கப்பட்ட காடுகளைச் சீர்த்திருத்தவும், புதியதாகக் காடுகளை அழிக்காமல் பாதுகாக்கவும் செலவழிப்பதாக உறுதி கூறியிருக்கிறார்கள். குறிப்பிட்ட தொகைக்காக நாட்டின் பொது நிதியுடன் தனியாரிடமிருந்து வரும் நிதியும் பாவிக்கப்படும்.
உலகின் 30 பாரிய நிறுவனங்கள் காடுகளை அழிக்கத் தூண்டக்கூடிய முதலீடுகளை நிறுத்துவதாக உறுதி கூறியிருக்கின்றன.
புதிய கிளாஸ்கோ ஒப்பந்தத்தில் குறிப்பிட்டது போலவே நியூ யோர்க்கில் 2014 ம் ஆண்டில் கூடிய நாடுகளும் தமது நாடுகளில் காடுகளை அழிப்பதை 2030 இல் நிறுத்துவதாகவும், 2020 இல் தாம் அதில் பாதிவழியைத் தாண்டிவிடுவதாகவும் உறுதிகூறியிருந்தன. ஆனால், அவ்வுறுதிகள் காற்றில் விடப்பட்டன என்பதால் இவ்வொப்பந்தமும் காலநிலை ஆர்வலர்களிடையே பெரும் உற்சாகத்தை ஊட்டவில்லை.
காடுகளை அழிப்பதைத் தடுப்பதில் அப்பிராந்தியத்தில் பரவலான பழங்குடியினரின் ஆதரவு தேவை என்கிறார்கள் பழங்குடியினரின் பிரதிநிதிகள். காடுகளில் தங்கி வாழும் அவர்களின் வாழ்க்கைக்கான மாற்றுவதற்கான நிதியுதவி மட்டுமன்றி பெரும் விவசாய நிறுவனங்கள், அரசியல்வாதிகளிடமிருந்து பாதுகாப்பையும் அவர்கள் கோருகிறார்கள்.
பெரும்பாலும் மழைக்காட்டுப் பிராந்தியங்களில் வாழும் பழங்குடியினர் தமது பகுதிகள் பாதுகாக்கப்படுவதைத் தடுக்கப் போராடி வருகிறார்கள். அவர்களைப் பணபலம், ஆயுதபலமுள்ளவர்கள் மிரட்டியும், துரத்தியும் வருகிறார்கள். அக்காட்டுப் பிராந்தியங்களில் இருக்கக்கூடிய கனிம வளங்களின் மீது பாரிய நிறுவனங்கள் கண்வைத்துச் செயற்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்