கஷோஜ்ஜி கொலை வழக்கை நிறுத்தும்படி துருக்கிய அரச வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கோரிக்கை.
வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எழுதிவந்த சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோஜ்ஜி துருக்கியிலிருக்கும் சவூதி அரேபியத் தூதுவராலயத்தில் 2018 இல் கொலை செய்யப்பட்டார். தனது மண்ணில் வைத்து சவூதி அரேபிய அரசு செய்த அக்கொலை துருக்கிய அரசுக்குப் பெரும் கோபத்தை உண்டாக்கியது. இரண்டு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவுகளை முறித்துப் பனிப்போரை உண்டாக்கியிருந்தது.
திட்டமிட்டிருந்த அவரது திருமணத்துக்கான பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளத் தூதுவராலயத்துக்குத் திட்டமிட்டு வரவழைக்கப்பட்டு சவூதியப் பட்டத்து இளவரசன் முஹம்மது பின் சல்மானின் உத்தரவின் பேரிலேயே அவர் கொல்லப்பட்டதாகப் பெரிதும் நம்பப்படுகிறது. அதைப் பற்றி விசாரித்த துருக்கிய பொலீஸ் 26 சவூதி அரேபியர்களைக் குற்றவாளிகளாக்கி வழக்கை ஆரம்பித்திருந்தது. அந்த வழக்கை ரத்து செய்து அதை சவூதி அரேபிய நீதிமன்றத்திடம் ஒப்படைக்கும்படி நாட்டின் அரச வழக்கறிஞர் ஒருவர் கோரியிருக்கிறார்.
குற்றஞ்சாட்டப்பட்ட 26 பேரும் துருக்கியில் இல்லையென்பதால் அவ்வழக்கு சவூதி அரேபியாவில் விசாரிக்கப்படலாம் என்று அதற்கான காரணம் கூறப்படுகிறது. அந்தக் கோரிக்கையை நாட்டின் நீதி அமைச்சுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக நீதிமன்றம் பதிலளித்திருக்கிறது.
சவூதி அரேபியாவுக்கும் துருக்கிக்கும் இடையே நீண்டகாலமாக நிலவிவந்த பகையில் மென்மை தெரிய ஆரம்பித்திருக்கிறது. அதன் விளைவே இந்த மாற்றத்துக்குக் காரணம் என்று கணிக்கப்படுகிறது. சவூதி அரேபியாவால் கஷோஜ்ஜியை விசாரிக்க அனுப்பப்பட்டவர்கள் கொடூரமாக நடந்துகொண்டதே அக்கொலைக்குக் காரணம் என்பது சவூதிய அரசின் உத்தியோகபூர்வமான விளக்கமாகும். 2020 இல் அங்கே இதுபற்றி வழக்கு நடத்தப்பட்டு எட்டுப் பேருக்குக் கடுமையான சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டதாக சவூதிய அரசு குறிப்பிட்டது.
துருக்கிய நீதிமன்றம் அங்கே தண்டிக்கப்பட்டவர்களின் பெயர்களைக் கேட்டு சவூதி அரேபிய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தது. தனது விசாரணையில் அதே நபர்கள் மீண்டும் தண்டிக்கப்படலாகாது என்பதால் அவர்களின் பெயர்களைக் கோரியிருந்த துருக்கிக்கு அவ்விபரங்கள் கொடுக்கப்படவில்லை. பதிலாக துருக்கியின் வழக்கில் குறிப்பிடப்படிருக்கும் 26 நபர்களின் விபரங்களைச் சவூதி அரேபியா கேட்டிருக்கிறது. அவர்கள் துருக்கியர்கள் அல்ல என்பதால் அவர்களை எப்படியும் தண்டிக்கத் துருக்கியால் முடியாது என்பதால் அவ்வழக்கைச் சவூதி அரேபியாவே ஏற்பது பொருத்தமானது என்று துருக்கி இப்போது குறிப்பிட்டிருக்கிறது.
கஷோஜ்ஜியின் மரணத்துக்குக் காரணமானவர்களைச் சட்டம் தண்டிக்க வேண்டும் என்று கோரிப் போராடி வந்த கஷோஜ்ஜியின் காதலி ஹத்திஸ் செஞ்ஜிஸ் துருக்கிய அரசின் முடிவு தனக்கு ஏமாற்றம் தந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இக்கொலையின் விசாரணை ஆரம்பித்த இடத்துக்கே திரும்பிப் போயிருப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்