ஐந்து ரஷ்யப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாம் தடவையும் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகினர்.
மொத்தமாக பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஐவர் இரண்டாம் தடவை தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும் ரஷ்யப் பாராளுமன்றத்தின் கீழ்ச் சபையான டூமான் சபாநாயகர் வியோச்சலோவ் வொலொடின் அறிவித்தார்.
அந்த ஐந்து பேரிலும் முதல் தடவை தொற்று ஏற்பட்டபோது பாதுகாப்பு எதிரணுக்கள் உருவாகவில்லை என்று குறிப்பிட்ட ரஷ்ய டுமானின் 450 உறுப்பினர்களில் 157 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர் “தயவுசெய்து பயணங்கள் செய்வதைத் தவிருங்கள். வரவிருக்கும் பெருநாள் விடுமுறைகளில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஆரோக்கிய விதிமுறைகளைக் கைக்கொள்ளுங்கள்,” என்று கேட்டுக்கொண்டார்.
“ரஷ்யர்கள் எவருமே இரண்டாம் தடவை கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகவில்லை,” என்று இதுவரை ரஷ்ய அதிகாரிகள் விடாப்பிடியாகச் சொல்லி வந்தார்கள். அவர்களுக்குச் சவால்விட்டு ஒரு ரஷ்ய விஞ்ஞானி தனக்குத் தானே இரண்டு தடவை கொரோனாத் தொற்றை உருவாக்கியதையும் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த வாரம் ரஷ்யா தனது நாட்டு மக்களுக்குத் தம் உள் நாட்டுத் தடுப்பு மருந்தான Sputnik V ஐக் கொடுக்க ஆரம்பித்திருக்கீறார்கள். அந்தத் தடுப்பு மருந்து 91.4 % நம்பத்தகுந்த பாதுகாப்பைத் தருகிறது என்று ரஷ்ய ஆராய்வுகள் நிரூபித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்