“பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்ப வாருங்கள்,” என்று இஸ்ரேலியருக்கு அழைப்பு விடுக்கும் பலஸ்தீனர்கள்!
நீண்ட காலமாக இஸ்ராயேலிய அரசுடன் பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்ட பலஸ்தீனாப் பிரதேசத்தின் அரசு இரண்டு நாடுகள் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளுக்கு மீண்டும் திரும்பும்படி கெய்ரோவில் வைத்து அழைப்பு விடுத்திருக்கிறது.
எகிப்திய, ஜோர்டானிய வெளிநாட்டு அமைச்சர்களுடன் சேர்ந்து கெய்ரோவில் நடாத்திய பலஸ்தீன நிர்வாகத்தின் வெளிவிவகார அமைச்சர் ரியாட் அல் – மலீக்கி மேற்கண்ட அழைப்பை இஸ்ரேலியர்களுக்கு விடுத்திருக்கிறார். அமெரிக்காவில் அரசு மாறும் என்ற தெரிந்தபின் ஏற்பட்டிருக்கும் பலஸ்தீனர்களின் மாறுதல்களின் முக்கிய விளைவாகவே இவ்வழைப்பு விடுக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது.
டிரம்ப் அரசு பலஸ்தீனர்களை ஓரம் கட்டி சவூதி அரேபியா – இஸ்ரேல் ஆகியவையுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி அரசியல் தீர்வுக்காகப் பலஸ்தீனர்களுக்குப் பொருளாதார மேம்பாட்டை உருவாக்கச் செய்த முயற்சிகளைப் பலஸ்தீனர் நிர்வாகம் விரும்பவில்லை. அதனால் அவர்கள் அமெரிக்காவுடனும், இஸ்ராயேலுடனும் தங்கள் பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டதுமன்றி தமது பக்கத்திலிருந்துவந்த அராபிய நாடுகளையும் தாக்கிப் பேசி வந்தார்கள்.
ஜோ பைடனின் தலைமையில் உண்டாக்கப்படவிருக்கும் நிர்வாகம் தங்களுடையே நோக்கங்களுக்குச் செவிகொடுக்கும் என்ற எண்ணத்திலும், தாம் ஒதுங்கிக் கொள்வதால் ஏற்பட்டிருக்கும் சர்வதேச அரசியல் நிலைமை தமக்குப் பங்கமேற்படுத்தும் என்றும் புரிந்துகொண்டதாலும் பலஸ்தீனர்கள் மீண்டும் தாங்களாகவே பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பியிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.
இஸ்ராயேலுடன் அராபிய நாடுகள் இணைந்து பல துறைகளிலும் செயற்படும் நிலைமை ஏற்பட்டிருக்கும்போது ஜோ பைடனின் அரசின் பலஸ்தீனச் சமாதானத் திட்டம் எப்படியிருக்கும் என்று அறிவதில் சகல பகுதியினரும் ஆர்வத்துடனிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்