“சுதந்திரத்தைச் சகிக்க முடியவில்லை, திரும்பவும் சிறைக்குக் கூப்பிடுங்கள்,” என்று வேண்டிக்கொள்ளும் சிறைப்பறவைகள்.
சிறைக்குள் கொவிட் 19 பரவாமலிருப்பதற்காகக் கேரள அரசு தனது சிறைக்குள்ளிருப்பவர்களைப் பகுதி பகுதியாக வெளியே அனுப்பி வருகிறது. சீமணி, காசர்கோடு சிறைச்சாலையிலிருந்து அப்படித் தற்காலிகமாக அனுப்பப்பட்டவர்களில் ஒரு பகுதியினரின் வேண்டுகோள்தான் இது.
230 பேரைக்கொண்ட இந்தச் சிறைச்சாலையில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் அரசியல் கொலைகளில் ஈடுபட்டவர்களாகும். அவர்களில் 10 பேரைத் தவிர மற்றவர்கள் எல்லோரையும் சமீபத்தில் பிரத்தியேக விடுமுறை கொடுத்து வெளியே அனுப்பினார்கள்.
அச்சிறையிலிருப்பவர்களில் 157 பேர் தற்போது வெளியே தற்காலிகமாக விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் தாம் திரும்பவும் சிறைக்கே வந்துவிடுகிறோம் என்று அனுமதி கோரியிருக்கிறார்கள். ஒரு சிலர் தமது விடுமுறையை நீடிக்க வேண்டியும் கோரியிருக்கிறார்கள்.
சிறைக்குள்ளிருக்கும் சூழலும், அக்கைதிகள் அங்கே வேலை செய்து கூலி பெற்றுக்கொள்ள முடிவதும் அவர்கள் திரும்பி வரவேண்டியிருப்பதன் முக்கிய காரணமாக இருக்கலாமென்கிறார்கள் சிறை அதிகாரிகள். எவரையும் தற்போதைக்குக் கட்டாயமாகச் சிறைக்கு வரச்சொல்லும் திட்டமில்லை என்று சொல்லும் அதிகாரிகள், திரும்பிவர விண்ணப்பித்தவர்கள் பற்றிய முடிவெதையும் இதுவரை எடுக்கவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்