இதுவரை பிரிட்டிஷ் மக்கள் பாவித்து வந்த ஐரோப்பிய ஒன்று ஆரோக்கியக் காப்புறுதி ஜனவரி 1 முதல் செல்லுபடியாகாது.
ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் ஒன்றியத்துக்குள் எங்கே போனாலும் தங்களுடன் கொண்டு செல்லும் காப்புறுதி அட்டையைக் காட்டி அந்தந்த நாட்டின் ஆரோக்கிய சேவைகளை அந்த நாட்டுக் குடிமக்களைப் போலவே பெற்றுக்கொள்ளலாம். பிரிட்டர்களும் அனுபவித்து வந்த அந்தச் சலுகை பிரெக்ஸிட் நடைமுறை வருவதுடன் செல்லுபடியாகாது. பிரயாணம் செய்யும்போது பயணக் காப்புறுதிகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று எல்லா நாட்டவர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பிரிட்டிஷ் கடவுச்சீட்டுடன் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளும், நோர்வே, ஐஸ்லாந்து, சுவிஸ் போன்ற நாடுகளுக்குள் தொடர்ந்தும் 90 நாட்கள் பயணம் செய்யலாம். ஆனால், பிரிட்டிஷ் கடவுச்சீட்டுக்களை அந்தந்த நாடுகள் எல்லையில் பரிசீலிக்கக்கூடும். கிரவேஷியா, ருமேனியா, பல்கேரியா, சைப்பிரஸ் ஆகிய நாடுகள் இவ்விடயத்தில் வித்தியாசமான முடிவுகளை எடுத்திருக்கின்றன.
பிரிட்டிஷ் குடிமக்களும் ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களும் இரண்டு பக்கத்திலும் விருப்பத்துக்கேற்றபடி குடியேற, வாழ, வேலை செய்யக் கூடியதாக இருந்த அனுமதி இனிமேல் செல்லுபடியாகாது. இரண்டு பகுதிக் குடிமக்களும் மற்றப் பகுதியிலிருக்கும் நாட்டின் குடியுரிமைச் சட்டங்களுக்கேற்றபடி விண்ணப்பத்தை அனுப்பி அந்தந்த நாடு கொடுக்கும் முடிவின்படியே நடந்துகொள்ளவேண்டும். ஏற்கனவே குடியேறியிருப்பவர்கள் ஜூன் மாதம் வரை முன்னைப்போன்ற உரிமைகளை அனுபவிக்கலாம், ஆனால், ஜனவரி 1 ம் திகதிக்குப் பின் தொடர்ந்தும் இருப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். அதற்கான முடிவை அந்தந்த நாடு எடுக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்