புதிய வைரஸ் தொற்றிய முதல் நபர் பிரான்ஸ் Tours நகரில் கண்டுபிடிப்பு
மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் தொற்றிய முதல் நோயாளி பிரான்ஸில் நத்தார் தினமான நேற்று கண்டறியப்பட்டுள்ளார்.
பிரிட்டனில் இருந்து கடந்த 19 ஆம் திகதி பிரான்ஸின் Tours( Indre-et-Loire) நகருக்கு வருகைதந்த ஆண் ஒருவருக்கே புதிய வைரஸ் தொற்றி இருக்கிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.பிரிட்டனில் வசிக்கும் பிரெஞ்சுப் பிரஜையான அவருக்கு Tours மருத்துவமனையில் வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.
அவர் தற்சமயம் அவரது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.ஆரோக்கியமான நிலையில் காணப்படுகின்ற அவருடன் தொடர்பு வைத்திருந்த அனைவரையும் தேடிக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.
பிரிட்டனில் மிக வேகமாகப் பரவிவருகின்ற மாற்றமடைந்த புதிய வைரஸ் (new coronavirus variant) ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து உட்பட சில ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே கண்டறியப்பட்டிருக்கிறது.முந்திய கொரோனா வைரஸை விடவும் 70வீதம் வேகமாகப் பரவுகின்ற தன்மை இந்தப் புதிய வைரஸில் அவதானிக்கப் பட்டிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
குமாரதாஸன். பாரிஸ்.