சிரியாவின் அல் ஹொல் முகாமிலிருந்து தனது நாட்டுப் பெண்களைத் திரும்பக் கொண்டுவர இருக்கிறது பின்லாந்து.
வட சிரியாவிலிருக்கும் அல் ஹோல் நகரிலிருக்கும் அகதிகள் முகாமில் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஈராக், சிரியா போன்ற நாடுகளில் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்புக்காகப் போராடச் சென்ற பெண்கள் தமது பிள்ளைகளுடன் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அச்சிறையிலிருக்கும் பெண்கள் மீது ஐ எஸ் அமைப்புடன் போரில் ஈடுபட்ட சிரிய – குர்தீஷ் நிர்வாகம் வழக்குத் தொடர்வதே நோக்கம். ஆனால், அவர்களிடம் அதற்கான போதிய வசதிகளில்லாததால் அந்த முகாம் போதிய கவனிப்பின்றி வாழத் தகுதியற்ற வசதிகளெதுவுமில்லாததாக இருப்பது மட்டுமன்றி அவர்கள் மீதான வழக்குகள் சமீப காலத்தில் எப்போது நடக்குமென்றும் தெரியவில்லை. அப்பெண்களுடன் வாழும் சிறார்களோ தீவிரவாதக் கோட்பாடுள்ள அப்பெண்களால் தீவிரவாத எண்ணங்களூட்டப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள் என்பது பல பத்திரிகையாளர்களாலும் குறிப்பிடப்பட்டது.
எவராலும் விரும்பப்படாத அப்பெண்களைத் தமது நாடுகளுக்கு மீண்டும் கொண்டுவருவது பல ஐரோப்பிய நாடுகளுக்கும் அரசியல் நஷ்டம் விளைவிக்கும் என்பதால் அவர்களால் அது தடுக்கப்பட்டு வருகிறது. லஞ்சங்கள் கொடுத்து அங்கிருந்து தப்பித்து வரும் பெண்கள் அருகிலிருக்கும் நாடான துருக்கியில், அல்லது சொந்த ஐரோப்பிய நாடுகளில் கைது செய்யப்பட்டு நீதிக்கு முன்னால் நிறுத்தப்படுகிறார்கள்.
குர்தீஷ் நிர்வாகமோ பல தடவைகளிலும் அவர்களை அங்கிருந்து அகற்றும்படி ஐரோப்பிய நாடுகளிடம் கேட்டு வருகிறது. சமீபத்தில் பின்லாந்து அங்கிருந்து தனது நாட்டுக் குடியிரிமை கொண்ட இரண்டு பெண்களையும் ஆறு பிள்ளைகளையும் கொண்டுவந்திருக்கிறது. கிட்டத்தட்ட அதேயளவு பேர் சுவீடனுக்குத் தப்பிவந்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தற்போது பின்லாந்து தனது நாட்டுப் பெண்களையும் அவர்களது பிள்ளைகளுடன் மீட்டுக் கொண்டுவரத் திட்டமிடுகிறது. காரணம், அவர்கள் என்றாவது நாட்டுக்குத் திரும்பி வரவேண்டியவர்களே. அங்கிருந்து தீவிரவாதிகளாக உருப்பெற்றபின் எதிர்காலத்தில் திரும்பி வருவதை விட இப்போதே அவர்களைக் கொண்டுவந்து அரசின் சமூக சேவை அமைப்புக்களின் கைகளில் ஒப்படைக்கலாம் என்பதாகும். அதேசமயம் தீவிரவாதப் போரில் ஈடுபட்ட அப்பெண்களைப் பின்லாந்தில் சிறையில் வைக்கவும் முடியும்.
சுமார் நாலாயிரம் ஐரோப்பியர் அல் ஹோல் முகாமில் வாழ்கிறார்கள். பின்லாந்தின் மேலும் ஐந்து பெண்களும் அவர்களின் பதினைந்து குழந்தைகளும் அங்கே வாழ்கிறார்கள். குர்தீஷ் நிர்வாகத்திடம் எவ்வித வசதிகளும் இல்லையென்பதால் அங்கே அவர்கள் என்றாவது தண்டிக்கப்படும் பட்சத்தில் சரியான முறையில் தண்டிக்கப்படாமல் போகலாமென்ற அச்சமும் இருப்பதாகப் பின்லாந்து குறிப்பிடுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்