பாதுகாப்பான முறையில் கொரோனாக் கட்டுப்பாடுகளுடன் கூடிக் கொண்டாடுவது சாத்தியமே!
கொரோனாத் தொற்றுக்கள் அதிகரிக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களை நடத்துவது சாத்தியமானதா என்று அறிந்துகொள்ள நெதர்லாந்து சமீப வாரங்களில் பல நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்துகொண்டு பரீட்சித்து வருகிறது. இதுவரை அவற்றை அலசியாராய்ந்ததில் அப்படியாகக் கூடிக் குலவுதல் வெற்றிகரமாக நடத்தக்கூடியவையே என்று தெரியவருகிறது.
தொற்றுப்பரவல் கட்டுபாட்டு விற்பன்னர் அந்திரியாஸ் வொஸ் என்பவர் பங்கெடுக்கும் இந்த ஏற்பாடுகளில் பொது மக்கள் கட்டடங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் நடாத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார்கள். உதாரணமாக, நிறுவன மாநாடு, கலை நிகழ்ச்சி, பார்வையாளர்களுடன் கால்பந்துப் போட்டி, நாடக நிகழ்ச்சி, நகரக் கொண்டாட்டம் போன்றவைகள் நடாத்தப்பட்டன. அவைகளில் சிறிய அளவிலான கூட்டம், பெரிய அளவிலான கூட்டம் என்பவையும் அனுமதிக்கப்பட்டு முயற்சி செய்யப்பட்டன.
ஆகக்கூடியது 6,000 பேர் பங்கெடுத்த நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டிருக்கின்றன. இந்த முயற்சி – ஆராய்ச்சி இதுவரை நிறைவு பெறவில்லை. ஆனாலும், இதுவரை நடத்தியவற்றை ஆராய்ந்ததில் ஆகக்கூடியது 5 பேர் மட்டுமே தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று கவனிக்கப்படுகிறது.
நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறவர்கள் எல்லாரும் 48 மணிக்கு முன்னர் கொரோனாத் தொற்றுக்காகப் பரிசோதிக்கப்படுகிறார்கள். அவர்களில் தொற்றில்லாதவர்கள் மட்டுமே நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேற்கண்ட பரிசோதனைகளின் முடிவுகளிலிருந்து நெதர்லாந்து அரசு வெவ்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தும் நிறுவனங்கள் ஜூலை மாதம் முதல் மீண்டும் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தலாம் என்று அறிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்