சூரியக் கதிர்களைச் செயற்கையாக மறைத்து அதன் மூலம் காலநிலை மாற்றம் பற்றிய பரிசோதனை செய்யும் முயற்சி நிறுத்தப்பட்டது.

சுவீடனின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து ஹாவார்ட் விஞ்ஞானிகளால் நடாத்தப்பட இருந்த Stratospheric Controlled Perturbation Experiment என்ற பரிசோதனையை சுவீடன் தடுத்து நிறுத்தியது. இப்பரிசோதனைக்கான செலவுகளில் பில் கேட்ஸின் ஆராய்ச்சி நிறுவனமும் பங்குபெற்றிருந்தது. 

வான்வெளியில் உயரப் பறக்கும் பலூன்களில் கல்சியம் காபர்னேட்டை நிறைத்து அனுப்பி அவை மூலமாகச் செயற்கையான முகில்களை உருவாக்குவதன் மூலன் சூரியக் கதிர்களை மறைப்பதே இத்திட்டமாகும். சூரியக் கதிர்களைப் பூமிக்கு வரமுதல் தடுத்து நிறுத்துவதன் மூலம் பூமி வெம்மையாதலைத் தடுத்து நிறுத்தலாமா, அதன் வழியாகக் காலநிலை மாற்றங்கள் உண்டாகாமலிருப்பதை தடுக்க முடியுமா என்பதை அறியவே விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தார்கள்.  

இதற்கான எதிர்ப்புப் பல வகைகளிலும் எழுந்தது. விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை இப்படியான பரிசீலனையானது நல்ல விளைவுகளை உண்டாக்குமா இல்லையா என்பது பற்றிப் பலமான கருத்துக்கள் இருக்கின்றன. சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் இப்படியான பரிசோதனைகளில் விஞ்ஞானிகள் முயற்சி செய்வதைக் காட்டி உலக நாடுகள் நாம் எதிர்நோக்கும் காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளுக்கு அணைபோடவேண்டிய அரசியல், பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சியைக் கைவிட்டுவிடலாம் என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.

அத்துடன் விண்வெளிப் பரிசோதனை நிலையம் அமைந்திருக்கும் நகரான கிருணாவைச் சுற்றி வாழும் சிறுபான்மைப் பழங்குடிமக்களான சாமி மக்களும் அப்பரிசோதனை தமது பிராந்தியத்தில் நடப்பதை எதிர்த்தார்கள். அந்த ஆராய்ச்சி மூலமாக வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் கல்சியம் கார்பனேட்டின் அளவு  எவ்விதப் பாதிப்பையும் உண்டாக்காது என்ற விஞ்ஞானிகளின் உறுதிப்படுத்தலை அவர்கள் ஏற்கவில்லை. 

நீண்டகாலத் திட்டத்தின் பின்னர் நடக்கவிருந்த இந்தப் பரிசோதனை நடக்காதது ஒரு பின்னடைவு என்று குறிப்பிட்ட ஹாவர்ட் பல்கலைக்கழகத்தினர் இதை அமெரிக்காவில் நடத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *