“மிட்டாய்த் தயாரிப்புக்களில் பாமாயிலுக்குப் பதிலாகத் தேங்காயெண்ணையைச் சேர்த்துக்கொள்ள அவகாசம் வேண்டும்!”
இவ்வார ஆரம்பத்தில் சிறீலங்கா ஜனாதிபதி “தெங்குப் பொருட்களின் தயாரிப்பைக் ஊக்கப்படுத்த, பாமாயில் இறக்குமதியும், விற்பனையும் தடுப்பு,” என்று அறிவித்திருந்தார். நாட்டின் இனிப்புப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தற்போதைய நிலையில் அது ஒரு கேடு விளைவிக்கும் நடவடிக்கை என்கிறார்கள்.
ஜனாதிபதியின் அறிவிப்புக்கான திட்டங்களின் ஆரம்பம் கணிசமான காலத்துக்கு முன்னரே எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. நாட்டின் பாமாயில் தோட்டங்களில் மரங்களை, மாற்றிப் பயிரிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. அதே போலவே இனிப்புப் பொருட்களைத் தயாரிப்பவர்களுக்கு அவர்களுடைய பொருட்களில், பதிலாகத் தேங்காயெண்ணெயைப் பாவிக்கும்படி ஒன்பது மாதங்களுக்கு முன்னரே கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆரம்பத்தில் சிறீலங்கா ஜனாதிபதியின் திட்டத்துக்கு எதிராக இருந்த இனிப்புப் பண்டத் தயாரிப்பாளர்கள், பின்னர் அத்திட்டத்தின் பின்னணியை ஏற்றுக்கொண்டு தேங்காய் எண்ணெய்த் தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து தமது உணவுப் பண்டத் தயாரிப்பில் பாமாயிலைத் தவிர்க்கும் திட்டங்களில் இறங்கியிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். ஆனால், அப்படியான முடிவுப் பொருட்கள் இன்னும் தயாராகாததால் மேலும் அவகாசம் வேண்டி நிற்கிறார்கள்.
இலங்கையின் இனிப்புப் பண்டத் தயாரிப்பாளர்களின் பாமாயில் மாதத் தேவை சுமார் 1,500 மெற்றிக் தொன் ஆகும். விரைவில் வரவிருக்கும் சிங்கள, தமிழ் புதுவருடம், ரமஸான் ஆகியவையை ஒட்டித் தேவையான இனிப்புப் பண்டங்களைத் தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வரும் அவர்களிடம் அவைக்குத் தேவையான பாமாயில் ஓரிரு தினங்களுக்கு மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்