“எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யாமல் போக விடமாட்டோம்,” என்று எவர் கிவன் சரக்குக் கப்பலிடம் எகிப்து.
சில வாரங்களுக்கு முன்னர் எகிப்தின் சுயஸ் கால்வாய் வழியாகப் பயணித்து விபத்துக்குள்ளாகிய சரக்குக் கப்பல் எவர் கிவனைப் (Ever Given) பிடித்த சனி இன்னும் தொலையவில்லை. கால்வாய்க்குள் குறுக்காக மாட்டப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட கப்பலைக் கைப்பற்றி வைத்திருக்கிறது எகிப்து.
சரக்குக் கப்பல் தனது விபத்தினால் எகிப்திய அரசுக்கு ஏற்படுத்திய இழப்பைக் கப்பல் நிறுவனம் தரவேண்டுமென்று கேட்கிறது எகிப்து. சுயஸ் கால்வாயின் நிர்வாகத் தலைவரான ஒஸாமா ராபியே “எங்களுக்கு இந்தக் கப்பலால் ஏற்பட்ட இழப்பு சுமார் ஒரு பில்லியன் டொலர்களாகும். அத்தொகையைத் தரவேண்டியது இந்தக் கப்பலின் நிறுவனத்தின் பொறுப்பு,” என்கிறார்.
போக்குவரத்து முடக்கப்பட்ட காலத்தில் இழந்த தொகை, சரக்குக் கப்பலை விடுவிக்க ஏற்பட்ட உபகரணச் செலவு, அந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட சுமார் 800 பேருக்கான ஊதியங்கள் போன்றவைகளை வைத்தே அந்தத் தொகை கணிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
சரக்குக் கப்பல் ஏன் மாட்டிக்கொண்டது என்பது பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்