கடலலைகளையும், காற்றையும் ஒன்றுசேர்த்து கிரவேசியக் கலைஞர் ஸடார் நகரில் செய்திருக்கும் ஒரு அற்புதம்.
சுமார் 3,000 வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட ஸடார் ஐரோப்பாவின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இல்லீரிய இனத்தினரால் ஸ்தாபிக்கப்பட ஸடார், ரோமர், வெனிஸியர், பிராங்கர், இத்தாலியர், ஆஸ்திரிய – ஹங்கேரிய சாம்ராஜ்யத்தினர் ஆகியோரால் அதன்பின்பு வெவ்வேறு காலங்களில் ஆளப்பட்டது.
ஸடார் நகரிலிருந்து துறைமுகத்தை நோக்கி நடக்கும் பாதையே அழகாக அமைக்கப்பட்டிருந்தது. பூமரங்களும், செடிகளும், மெத்தைபோன்ற பச்சைப்புற்றரையும் எங்களைச் சுற்றியிருந்தன. அருகிலிருந்த பல கட்டடங்கள் நவீனப்படுத்தப்படிருந்தாலும் அவைகளில் பழமையைக் காண முடிந்தது. முக்கியமாகப் பல சாளரங்களின் அமைப்புக்களில் பழமை தெளிவாகத் தெரிந்தது. சுற்றிவரப் பூஞ்செடிகளால் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்த சில சாளர அமைப்புக்கள் கண்களைக் கவர்ந்ததைக் குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை.
துறைமுகத்தை அடையும்போது தூரத்தில் வான எல்லையில் சூரியன் மறைந்துகொண்டிருந்தது. அதன் மஞ்சள் நிறக்கதிர்கள் அந்த அதிரியாக் கடற்பிரதேசம் முழுவதையும் தனது ஒளியால் ஆக்கிரமித்திருப்பதைக் காண்பது ஒரு வித்தியாசமான அனுபவம். கடலில் மிதந்துகொண்டிருந்த மாளிகைகள் போன்ற உல்லாசக்ப் பயணக்கப்பல்களும், சிறிய படகுகளும், பாய்க் கப்பல்களும் கூடத் தங்கள் மேல் மஞ்சள் நிறத்தை வாரிப் பூசிக்கொண்டிருந்தன.
“உலகின் மிக அழகான சூரிய அஸ்தமனத்தை ஸடாரில் தான் காண முடியும்,” என்று பிரபல பிரிட்டிஷ் சினிமா இயக்குனர் அல்பிரட் ஹிட்ச்கொக் 1964 இல் குறிப்பிட்டிருப்பதாகச் சுற்றுலாப் பயணிகளுக்கான பெரும்பாலான ஸடார் நகரக் கையேடுகளில் காணக்கிடக்கிறது.
இயக்குனர் ஹிட்ச்கொக் அந்தக் கடற்கரையின் மகிமையை மிகைப்படுத்தாமல்தான் சொல்லியிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். அங்கே ஏற்கனவே நிறையப் பேரைக் காணமுடிந்தது. மேலும் பலர் வந்துகொண்டிருந்தார்கள்.
இக்கடற்கரையிலிருந்த ஒரு முக்கிய இசை – கட்டடக் கலை வேலைப்பாட்டைப்பற்றி நான் ஒரு வானொலி நிகழ்ச்சியில் கேள்விப்பட்டிருந்தேன். நேரடியாக அதைக் காணவேண்டும் என்ற ஆவல்தான் இப்பிரயாணத்தில் ஸடாரையும் சேர்த்துக்கொள்ள என்னைத் தூண்டியிருந்தது.
அந்தக் கடற்கரைத் துறைமுகத்தில் [Nikola Bašić] நிக்கோலா பாசிச் என்ற கலைஞரின் கற்பனையுடன் அவரது கைவண்ணத்தால் [2005 இல்] உருவாக்கப்பட்டிருக்கும் எனப்படும் sea organ என்ற வித்தியாசமான இசைக்கருவி.
சுற்றுலாப் பயணிகளின் பாரிய கப்பல்கள் வரும் ஒரு சாதாரணமான துறைமுகமாக இருந்த அந்தக் கடற்கரையில் அக்கலைஞர் கட்டடக்கலையுடன் சேர்ந்த அமைப்பில் இயற்கையின் விளையாட்டைப் பாவித்து ஒரு இசைக்கருவியை அமைத்திருக்கிறார் என்று நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. அத்துடன் அந்த இசைக்கருவி அவர் திட்டமிட்டதுபோல அங்கே வருபவர்களை வரவேற்கும் இசையை ஒலிக்கிறது என்று நேரடியாக உணரும்போது புல்லரிக்கிறது.
பளிங்குக்கற்களால் அமைக்கப்பட்டிருக்கும் அந்தக் கடற்கரைப் படிக்கட்டுகளில் அடிக்கும் அலைகளின் நாட்டியம் அப்படிக்கட்டுகளினூடே நீர்மட்டத்தின் கீழே அமைந்திருக்கும் ஊதுகுழல்கள் போன்ற ஓட்டைகளினூடாகக் காற்றைச் செலுத்துகிறது. வெவ்வேறு அளவுகளில் அமைக்கப்பட்டிருக்கும் அந்த 35 ஊதுகுழல்களினூடாகப் பயணமாகும் காற்று நீர் மட்டத்துக்கு மேலே இருக்கும் இரண்டு படிகளில் வரிகளாக இருக்கும் குழாய்கள் மூலமாக வெளியே இசையாக மாறி ஒலிக்கிறது.
கடலலைகள் வெவ்வேறு அளவில், வெவ்வேறு வேகத்தில் தாக்கும்போது, ஏற்படும் அதிர்வினால் அக்குழல்களினூடாகக் காற்று வித்தியாசமான அளவில் புகுவதால் அங்கே எப்போதுமே இயற்கை தன் இசையமைப்பை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. பியானோ அல்லது ஆர்மோனியம் போன்ற ஒரு விதமான இசையால் நிறைந்திருக்கும் அவ்விடத்தில், மாலைச் சூரியக் கதிர்களில் குளித்துக்கொண்டிருந்தார்கள் பலர்.
அந்தப் படிக்கட்டுகள் சுமார் 70 மீற்றர் தூரத்துக்கு நீண்டிருப்பதால் அங்கே நிறையப் பேர் நின்று ரசிக்க இடமிருந்தது. உலகின் எத்தனையோ நாட்டுக்காரர்களை அங்கே காண முடிந்தது. அந்த மாலையில் கடலலைகளின் வேகம் அதிகமாக இல்லாதிருந்ததால் பலர் அங்கேயே குதித்து நீச்சலடித்துக்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் தங்களது நீச்சலுடைகளுடன் படிகளில் படுத்துச் சூரியக்கதிர்களில் குளித்துக்கொண்டிருந்தார்கள்.
அவ்விடத்தை ரசித்துப் படங்களை எடுத்துக்கொண்டிருக்கும்போது மெதுவாக இருட்டு எங்களைத் தழுவ ஆரம்பித்தது. அந்த நேரத்துக்கு வரவேற்புக் கொடுக்கவும் நிக்கோலா பாசிச் அருகிலேயே இன்னொரு கலை அமைப்பை உண்டாக்கியிருந்தார். அதன் பெயர்“சூரிய நமஸ்காரம்.” இந்தக் கலை அமைப்புக்களுக்காக அந்தக் கலைஞருக்குப் பல சர்வதேச விருதுகளும் வழங்கப்பட்டிருக்கிறது என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்