உடற்பயிற்சி நிலையங்கள், தேவாலயங்களாக மாறின போலந்தில்.
கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை உலகில் வெவ்வேறு விதமாகக் கையாளுகின்றன. சில நாடுகள் நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டங்கள் முதல் சிறைத்தண்டனைகள் வரை கொடுக்கின்றன. நோர்வேயில் பிரதம மந்திரியே அக்குற்றத்துக்காகத் தண்டம் விதித்துத் தண்டிக்கப்பட்டார். நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்கும் இன்னொரு நாடு போலந்து.
கடந்த ஞாயின்றன்று மட்டுமே தமது மூக்கையும், வாயையும் மறைக்காமல் முகக்கவசமணிந்திருந்த 5,000 பேருக்குத் தண்டம் விதிக்கப்பட்டது. கொரோனாக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை சுமார் 392,000 தண்டங்கள் பொலீசாரால் விதிக்கப்பட்டிருக்கின்றன. 57,000 பேர் நீதிமன்றங்களில் நிறுத்தப்படவிருக்கிறார்கள்.
உடற்பயிற்சிக் கூடங்களில் போட்டிகளில் பங்குபற்றும் விளையாட்டு வீரர்கள் மட்டுமே பயிற்சிசெய்யலாம் என்ற விதியை மீறிய பல உடற்பயிற்சிக்கூடங்கள் தண்டிக்கப்படவிருக்கின்றன. தெற்கு போலந்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உடற்பயிற்சிக் கூடங்களைத் திறந்துவைத்திருந்த அதன் சொந்தக்காரர் 8 வருடச் சிறைத்தண்டனை பெறலாம் என்று தெரிகிறது.
அட்லாண்டிக் ஜிம் என்ற பெயரில் உடற்பயிற்சிக்கூடங்கள் வைத்திருப்பவர்கள் “உங்கள் உடல் ஒரு கோவில் அதற்கு இங்கே பயிற்சி கொடுங்கள்,” என்ற விளம்பரம் கொடுத்து தமது உடற்பயிற்சி நிலையங்களை “தேவாலயங்கள்” என்று மாற்றியிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்