“இந்தத் தொற்று நோயை ஒழிக்கவேண்டுமானால், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துங்கள்!” ஆடார் பூனவாலா.
உலகின் மிகப்பெரும் தடுப்பூசித் தயாரிப்பாளர்களான செரும் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் ஆடார் பூனவாலா நேரடியாக அமெரிக்க ஜனாதிபதியை விளித்து டுவீட்டியிருக்கிறார். அமெரிக்கா தனது நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகளோ, அவைக்கான மூலப்பொருட்களோ, தளபாடங்களோ ஏற்றுமதி செய்யப்படலாகாது என்ற கட்டுப்பாட்டைக் கைக்கொண்டு வருகிறது. அதைச் சுட்டிக்காட்டியே ஆடார் பூனவாலா அசாதாரணமான படியை எடுத்திருக்கிறார்.
இந்தியாவில் கொரோனாத் தொற்றும், இறப்புக்களும் படுவேகமாக அதிகரித்து வருகின்றன. தடுப்பூசிகள் நாடெங்கும் ஒரேயளவில் கிடைக்கவில்லை. ஆங்காங்கே தட்டுப்பாடுகள் எழுந்திருக்கின்றன. தொற்றுக்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஒரு நடவடிக்கையாகத் தடுப்பூசிகள் போடுவதைக் கடுகதி வேகமாக்கும்படி இந்திய அரசு வேண்டிக்கொண்டிருக்கிறது.
இந்தியப் பிரதமரும், பொருளாதார அமைச்சரும் “தனியார் துறையுடன் கைகோர்த்துக் கொரோனாத் தொற்றை ஒழிப்போம், உலக நாடுகளுக்கெல்லாம் தடுப்பு மருந்துகள் விநியோகிப்போம்,” என்று குறிப்பிட்டாலும் அவைகளில் உள்ளர்த்தம் அதிகமாக இருப்பதாகத் தெரியவில்லை. இந்திய அரசிடமும் கடந்த வாரங்களில் தமது பொருளாதாரக் குறைபாடுகள் பற்றி பூனவாலா தெரிவித்து உதவி கேட்டிருக்கிறார்.
இந்தியாவும், உலகின் வறிய நாடுகளும், உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பும் பெரிதும் நம்பியிருக்கும் செரும் இன்ஸ்டிடியூட் முதலீட்டுப் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது. உலக நாடுகளுக்குத் தடுப்பு மருந்துகளை விற்பதால் கிடைப்பதைவிடக் குறைந்த இலாபமே இந்திய அரசுக்கு விற்பதால் அந்த நிறுவனத்துக்குக் கிடைக்கிறது. உலக நாடுகளுக்கு அனுப்புவதாகச் செய்துகொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றுமளவுக்குத் தயாரிப்புக்களை அதிகரிக்கப், புதிய முதலீடுகளுக்குத் தாம் தவிப்பதாக ஆடார் பூனவாலா குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவின் ஏற்றுமதித் தடை செரும் இன்ஸ்ட்டிடியூட்டுக்கு தளபாட, மூலப்பொருள் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கான தீர்வுகளைக் காணவே அத்தடைகளைத் தளர்த்தும்படி ஜோ பைடனிடம் பூனவாலா நேரடியாக டுவீட்டி விண்ணப்பித்திருக்கிறார்.
அஸ்ரா செனகாவின் கொவிஷீல்ட் தவிர அமெரிக்க நிறுவனத்தின் நோவாவக்ஸ் என்ற தடுப்பு மருந்தையும் தயாரிக்க செரும் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் ஏற்றுமதித் தடைகளும், தமது பொருளாதார நிலைமையும் சேர்ந்து அந்த மருந்துத் தயாரிப்பை ஏறக்குறைய இல்லாமலே செய்திருப்பதாக அவர் குறைப்பட்டுக்கொள்கிறார்.
தனது நாட்டு நிறுவனங்களுக்குப் பொருளாதார உதவிகள் செய்வதாக இந்தியா அறிவித்திருக்கிறது. முதல் கட்டமாக கோவக்ஸீன் என்ற தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு உதவி அவர்களுடைய தயாரிப்புக்களை மாதாமாதம் 100 மில்லியன்களாக உயர்த்தவேண்டுமென்று இந்திய அரசு உறுதிபூண்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்