கொரோனாக்காலத்தில் கள்ளக்காதல் தொடர்புகளை மறைத்துவைக்க முடியாததால் இத்தாலியில் விவாகரத்துக்கள் அதிகரிப்பு.
கொரோனா இறப்புக்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளிலொன்று இத்தாலி. அதன் விளைவாக நாட்டில் நீண்டகாலம பொதுமுடக்கங்கள் நிலவின. பொருளாதார ரீதியில் பலர் பாதிக்கப்பட்டார்கள். அத்துடன் மேலதிகமாகத் தெரியவந்திருக்கும் ஒரு விடயம் 2020 இல் இத்தாலியில் விவாகரத்துக்கள் மிக அதிகமாகியிருக்கின்றன என்பதாகும்.
வழக்கமாக மாலை உணவு நேரத்தின்போது அரை அல்லது ஒரு மணி நேரம் மட்டும் தம்பதிகளுக்குச் சந்திக்க நேரம் கிடைக்கிறது. கொரோனாக் கட்டுப்பாடுகளால் பல நாட்கள் தம்பதிகள் நான்கு சுவர்களுக்குள் தினசரி அடைந்து கிடக்கவேண்டியதாயிற்று. ஒரு பகுதியினர் வீட்டிலிருந்து வேலை செய்ய இன்னொரு பகுதியினர் வேலைவாய்ப்புக்களை இழந்தனர். பல பிள்ளைகள் வீட்டிலிருந்து படிக்கவேண்டியதாயிற்று. இவையெல்லாம் சேர்த்து எல்லோர் மீதும் வெவ்வேறு விதமான அழுத்தங்களை உண்டாக்கின. பலருடைய பொருளாதார நிலைமையும் நிலைகுலைந்தது.
வழக்கமான ஒரு வருடத்தைவிட 2020 இல் விவாகரத்துக்கள் 60 விகிதத்தால் அதிகரித்தன. நாட்டின் தெற்குப் பகுதிகளைவிட வடக்கில் விவாகரத்துக்கள் அதிகம். பெண்களே வீட்டு வேலைகள், குடும்ப உறவுகள், பிள்ளைகளைப் பராமரிப்பது இத்தாலியில் வழக்கம். சுபீட்சமான வடக்கிலுள்ள பெண்கள் பலர் வேலைக்குச் சென்று சம்பாதிப்பவர்கள், சொந்தக் காலில் நிற்பவர்கள்.
கொரோனாக் கட்டுப்பாடுகளால் வீடுகளுக்குள் வாழவேண்டிவந்த சமயத்தில் தம்பதிகள் வெளியே வைத்திருந்த உறவுகள் பெரும்பாலும் பகிரங்கமாகியிருக்கின்றன. தம்பதிகளுக்குள்ளே இருந்த உறவின் விரிசல்களும் பெரிதாகியிருக்கின்றன. அதைத் தவிர உலகின் பல நாடுகளைப் போலவே குடும்பத்துக்குள்ளான வன்முறைகளும் அதிகரித்திருக்கின்றன. இவையெல்லாம் சேர்ந்தே விவாரத்து எண்ணிக்கை விழித்தெழுந்த எரிமலை போல அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்று குறிப்பிடப்படுகிறது.
இத்தாலியில் இதுபற்றி நடாத்தப்பட்ட கணிப்பீடுகளின்படி சுமார் 40 % விவாகரத்துக்களுக்குக் காரணம் தம்பதிகளிலொருவர் வெளியே மறைவாக வைத்துக்கொண்டிருந்த உறவாகும். 30 % விவாகரத்துக்கள் குடும்பத்துக்குள்ளான வன்முறைகளாலும் மற்றவை வேறு காரணங்களாலும் நடந்திருப்பதாகத் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்