ஒழுங்காகத் திட்டமிட்டுச் செயற்படாததால் கொரோனாப் பரவல் கைவிட்டுப்போன நாடுகளுக்கு உதாரணம் இந்தியாவா?
கொவிட் 19 ஆல் பிரேசிலில் இந்த மாதத்தில் இறந்தவர்கள் தொகை இதுவரை எந்த மாதத்தையும் விட அதிகமானதாக இருக்கிறது. மார்ச்சில் 66,573 பேரும் ஏப்ரலில் 67 977 பேரும் கொவிட் 19 ஆல் இறந்திருக்கிறார்கள். 3 076 பேர் கடந்த நாளில் மட்டும் இறந்திருக்கிறார்கள். ஒரு வாரத்தின் சராசரி இறப்பு 2,545 ஆக இருக்கிறது.
212 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட பிரேசிலில் 380,000 பேரைக் கொவிட் 19 இரையாக்கியிருக்கிறது. அமெரிக்காவில் மட்டுமே அதைவிட அதிகமானவர்கள் இறந்திருக்கிறார்கள். தொடர்ந்தும் பிரேசிலில் தினசரி 3,000 பேர் மேலும் சில வாரங்களுக்கு இறப்பார்கள் என்று பிரேசில் மருத்துவ சேவையினர் கணிக்கிறார்கள். அந்த அளவிலாவது கொவிட் 19 இன் தாக்கம் ஸ்திரமாகியிருப்பதாக அவர்கள் பெருமூச்சு விட்டுக்கொள்கிறார்கள்.
நாட்டின் 5.8% மக்களுக்கு மட்டுமே இதுவரை தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. பலவீனர்கள், முக்கிய சேவைகளிலிருப்பவர்களுக்குத் தடுப்பு மருந்துகள் கொடுப்பது செப்டெம்பரில் தான் நிறைவடையுமென்கிறார்கள். பிரேசிலில் திரிபடைந்த கொரோனாக் கிருமிகள் வீர்யமானவை. இளவயதினரைக் கடுமையாகத் தாக்கி வருகிறது. அக்கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டகால மருத்துவ உதவி தேவைப்படுவதால் நாட்டின் மருத்துவ சேவை கடுமையாகப் பாரம் சுமந்துவருகிறது, வரப்போகிறது வரப்போகும் சில வருடங்களுக்கு.
இந்தியாவைப் பொறுத்தவரை உலகின் இரண்டாவது அதிகமான கொவிட் 19 நோயாளிகள் அங்கேயிருக்கிறார்கள், தற்போது. அமெரிக்காவில் மட்டுமே அதைவிட அதிகம். இந்தியாவின் மக்கள் தொகையையும் அங்கே கொவிட் 19 கட்டுக்கடங்காமல் பரவ ஆரம்பித்தால் என்னாகும் என்பது சர்வதேச ரீதியில் பெரும் சஞ்சலத்தை ஏற்படுத்திருக்கிறது.
கொரோனாத்தொற்றுக்கு ஆளாகுபவர்களின் தினசரி எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக இருக்கிறது. வெள்ளியன்று 332 921 பேரும் அதற்கு முந்தைய தினம் 315,000 பேரும் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். அந்த இலக்கம் உலகில் எந்த நாட்டிலும் இதுவரை உண்டாகியதில்லை. வெள்ளியன்று 2,263 பேர் இறந்திருக்கிறார்கள், சனியன்று இறந்தவர் தொகை 2 624.
நாட்டின் பல பாகங்களிலும் மருத்துவசாலைகளில் இடமில்லாமல் போயிருக்கிறது. இன்னொரு பக்கத்தில் ஏற்பட்டிருக்கும் தொற்றின் வீர்யம் பலருக்கு பிராணவாயுத் தேவையை மருத்துவமனையில் ஏற்படுத்தியிருப்பதால் அதற்கான தட்டுப்பாடும் நாட்டின் பல மருத்துவமனைகளில் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
மக்கள் தொகை அதிகமான இவ்விரு நாடுகளிலும் பரவிவரும் கொரோனாக் கிருமிகளின் திரிபுகள் சர்வதேச அளவில் ஆராய்ச்சியாளர்களைக் கவலைப்படுத்தி வருகின்றன. அந்தக் கிருமிகளுக்கு ஏற்கனவே இருக்கும் தடுப்பு மருந்துகளின் பலம் போதுமா என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.
உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு இந்தியாவின் நிலைமையை “கொரோனாத் தொற்றால் ஏற்படக்கூடிய படு மோசமான நிலபரத்துக்கு உதாரணமானது,” என்று குறிப்பிட்டு எச்சரிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்