தன்னிடமிருக்கும் அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகளை வறிய நாடுகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்போகிறது அமெரிக்கா.
அமெரிக்காவின் மருந்துகளை அனுமதிக்கும் திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன் அவர்களிடமிருக்கும் சகல அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளையும் வறிய வெளிநாடுகளுக்குக் கொடுத்துவிட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. உலக ஆரோக்கிய அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்திற்கு ஊடாக அவை வெவ்வேறு நாடுகளிடையே பிரித்துக் கொடுக்கப்படுமென்று தெரிகிறது.
அமெரிக்காவின் பாவிப்புக்குத் தேவையான கொரோனாத் தடுப்பு மருந்துகளையெல்லாம் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மூன்று தடுப்பு மருந்துகளின் கையிருப்பால் தீர்க்கமுடியும். எனவே ஏற்கனவே கையிருப்பிலிருக்கும் அஸ்ரா செனகாவின் 10 மில்லியன் தடுப்பு மருந்துகளையும், வாங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் மேலும் 50 மில்லியன் தடுப்பு மருந்துகளையும் மனிதாபிமான உதவியாகக் கொடுத்துவிட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
பைசர், மொடர்னா மற்றும் ஜோன்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் மூலம் அமெரிக்காவின் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 54 % பேர் ஏற்கனவே தடுப்பூசி கொடுக்கப்பட்டுவிட்டார்கள். மீதியிருப்பவர்களுக்குத் தேவையானவற்றையும் வாங்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுத் தயாரிப்பிலிருக்கிறது..
எனவே அமெரிக்கா தன்னிடம் பல மாதங்களாக வைப்பிலிருக்கும் தடுப்பு மருந்துகளை அவசரமாகத் தேவையான நாடுகளுக்குக் கொடுக்காமலிருப்பது பற்றிய கடுமையான விமர்சனங்கள் சமீப வாரங்களில் எழுந்து வருகின்றன. பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் தடுப்பு மருந்துப் பற்றாக்குறையும், கொரோனா இறப்புகளுமே அந்த விமர்சனத்துக்கு முக்கிய காரணம். கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு மூன்று மில்லியன் தடுப்பு மருந்துகளைக் கடந்த மாதம் வழங்கியிருக்கிறது அமெரிக்கா.
சாள்ஸ் ஜெ. போமன்