இரவு ஊரடங்கை 11மணியாக்கி உணவகங்களை ஜுன் 9 முதல் முழு அளவில் திறக்க அனுமதி மே 19 வெளி இருக்கை திறப்பு.
நீண்ட காலம் மூடப்பட்டிருக்கின்ற உணவகங்கள், அருந்தகங்கள் என்பவற்றை எதிர்வரும் ஜுன் ஒன்பதாம் திகதி முதல் முழு அளவில் திறப்பதற்கு அனுமதிக்கப்படவுள்ளது. அதற்கு முன்பாக மே 19 ஆம் திகதி தொடக்கம் வெளி இருக்கைகளை மட்டும் திறந்து இயங்க முடியும். அன்று முதல் இரவு ஊரடங்கு ஒன்பது மணி தொடக்கம் அமுலாகும்.
உணவகங்கள் முழு அளவில் திறக்கப்படுகின்ற நாள் தொடக்கம் (ஜூன் 9) இரவு ஊரடங்கு ஆரம்ப நேரம் இரவு 11 மணியாக மாற்றப்படும்.கடைசிக் கட்டமாக ஜூன் 30 ஆம் திகதி ஊரடங்கு முற்றாக நீக்கப்படும்.
அதிபர் மக்ரோனின் பொது முடக்க தளர்வுகளில் இந்த விடயங்கள் இடம்பெற்றுள்ளன என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பொது முடக்கக் கட்டுப்பாடுகளை படிப்படியாகத் தளர்த்துகின்ற அரசின் கால அட்டவணை நாளை வெளியிடப்படவுள்ள
நிலையில் அதில் இடம்பெறுகின்ற முக்கிய திகதிகள் பற்றிய தகவல்கள் முன் கூட்டியே ஊடகங்களில் கசிந்துள்ளன.
பிராந்தியப் பத்திரிகைகளில் நாளை வெள்ளிக் கிழமை காலை வெளிவரவிருக்கும் அதிபரின் விசேட செவ்வியில் இடம்பெற்றுள்ள மேலும் சில முக்கிய விடயங்கள் வருமாறு :
முதலாவது கட்டத் தளர்வுகளின் தொடக்கமாக வரும் மே மூன்றாம் திகதி முதல் பத்து கிலோ மீற்றர்கள் என்ற தூரப் போக்குவரத்துக் கட்டுப்பாடு நீக்கப்படும்.பயண அனுமதிப்படிவ நடைமுறையும் நீங்கும்
மே 19:உணவகங்கள், அருந்தகங்கள் வாடிக்கையாளர்களுக்கு வெளி இருக்கைகளைத் திறக்கலாம். (ஒரு மேசையில் ஆறு பேர் மட்டும் என்ற கட்டுப்பாட்டுடன்) . சகல வர்த்தக நிலையங்களும் அன்றைய தினம் முதல் முழு அளவில் இயங்கலாம். சினிமா, அருங்காட்சியகம், காட்சி மண்டபங்கள் திறக்கப்படும். உள்நிகழ்வுகளில் 800 பேர், வெளி நிகழ்வுகளில் 1000 பேர்
என்ற வரையறை இருக்கும்.வீட்டில் இருந்து வேலை செய்வது நீடிக்கும். இரவு ஊரடங்கு ஒன்பது மணி முதல் தொடங்கும்.
ஜூன் 9 :இரவு ஊரடங்கு 11மணிக்கு தொடங்கும். உணவகங்கள், அருந்தகங்கள் முழு அளவில் இயங்கும்.உள்ளக, வெளியக விளையாட்டுகள் அனுமதிக்கப்படும். “சுகாதாரப் பாஸ்” நடைமுறை
யுடன் 5,000 பேர் பங்குபற்றும் கண்காட்சிகள், வர்த்தக கண்காட்சி நிகழ்வுகள் அனுமதிக்கப்படும்.
ஜூன் 30: இரவு ஊரடங்கு முற்றாக நீக்கப்படும். பொது முடக்கத்தில் இருந்து நாடு முற்றாக வெளியேறும். மக்கள் ஆயிரம் பேருக்கு மேல் ஒன்று கூடும் நிகழ்வுகள் அனுமதிக்கப்படும். இரவுக் களியாட்ட விடுதிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
குமாரதாஸன். பாரிஸ்.