வாடகை இராணுவத்தினரால் ஜனாதிபதி கொல்லப்பட்ட பின்னர் சர்வதேச அமைப்புகளிடம் ஹைத்தி உதவி கேட்கிறது.
ஹைத்தியின் ஜனாதிபதி ஜோவனல் மொய்ஸின் சொந்த வீட்டினுள் புதனன்று புகுந்த வெளிநாட்டு வாடகை இராணுவத்தினரால் அவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தலைநகரில் அவர்களுக்கும் ஹைத்தியின் பொலீஸாருக்கும் நடந்த மோதலின் பின்பு அவர்களில் 17 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
அந்தத் தாக்குதலில் மொத்தமாக 26 கொலம்பியர்களும் 2 அமெரிக்கர்களும் ஈடுபட்டதாகவும், யாருடைய உத்தரவின் பேரில் அது நடாத்தப்பட்டதென்று தெரியவில்லை. கைப்பற்றப்பட்டிருப்பவர்களில் 15 பேர் கொலம்பியர்கள். மற்றைய இருவரும் அமெரிக்கர்கள். உண்மை விபரங்களைத் தெரிந்துகொள்ள உதவுவதாக கொலம்பியாவின் அரசு அறிவித்திருக்கிறது. அமெரிக்கா தனது குடிமக்கள் எவரும் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி இதுவரை எதுவும் சொல்லவில்லை.
ஹைத்தியின் தற்காலிக ஜனாதிபதியாக நாட்டின் பிரதமர் கிளௌட் ஜோசப் பொறுப்பேற்றிருக்கிறார். ஐக்கிய நாடுகள் அமைப்பிடமும், அமெரிக்காவிடமும் ஹைத்தியின் முக்கிய இடங்களைப் பாதுகாக்க உதவுமாறு அவர் உதவி கேட்டிருக்கிறார். நீண்டகாலமாக அங்கே ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் கையாள அவர்களுக்கு உதவ தமது உளவு அதிகாரிகளை அனுப்புவதாகக் குறிப்பிட்டிருந்த அமெரிக்கா தற்போதைய நிலையில் உதவுவதற்கில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது.
நாட்டின் அரசியல் பெரும் பிரச்சினைகளை எதிர்பார்த்திருந்த நிலையில் கொலை செய்யப்பட முன்னர் ஏரியல் ஹென்ரி என்பவரைப் பிரதமராகத் தெரிவு செய்திருந்தார் ஜோவனல் மொய்ஸி. ஆனால், அவர் உத்தியோக பூர்வமாக இதுவரை பதவியேற்கவில்லை. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு இணங்க ஏற்கனவே பிரதமராக இருந்த கிளௌட் ஜோசப் தான் பதவியேற்க வேண்டும்.
அப்பதவியை ஏற்றிருக்கும் அவரை ஏற்றுக்கொள்ள எல்லோரும் தயாராக இல்லை. ஏரியல் ஹென்ரி தான் பதவியேற்கவேண்டுமென்று ஒரு பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். நிலைமையைத் தற்காலிகமாகச் சமாளிக்கு வவையில் செனட்டராக இருக்கும் ஜோசப் லம்பேர்ட் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்க வேண்டுமென்று நாட்டின் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பிரேரித்திருக்கிறார்கள். நிலைமை சீராகியபின் அவர் ஏரியல் ஹென்ரியைப் பிரதமராகப் பதவியேற்க ஒழுங்குசெய்யவேண்டுமென்பது அவர்களுடைய கோரிக்கை.
கிளௌட் ஜோசப் அந்தப் பிரேரணையை முழுசாக ஒதுக்கி வைத்துவிட்டுத் தலைமையைத் தானே எடுத்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. செப்டெம்பர் மாதத்தில் நாட்டில் தேர்தல் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. அதுவரை, சகல தரப்பினரும் தமது கருத்துக்களைக் ஒதுக்கிவைத்துவிட்டு நாட்டின் நிலைமையைச் சமாளிக்க உதவுமாறு அவர் கேட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்