அரச ஊழியர்களுக்கு ரூ 5,000 சம்பள உயர்வு உட்பட்ட ரூ 229 பில்லியன் பெறுமதியான நிதி உதவித் திட்டம் சிறீலங்காவில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சமீப காலத்தில் உலகின் பல நாட்டு மக்களைப் போலவே சிறீலங்காவிலும் மக்கள் எரிசக்தி, உணவு விலையேற்றம், தட்டுப்பாடு ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த நிலைமையை எதிர்கொள்ளும் விதமாக நாட்டு மக்களுக்கு வெவ்வேறு வகைகளில் உதவும் நிதித்திட்டங்களை வர்த்தக அமைச்சர் பசில் ராஜபக்சே செவ்வாயன்று வெளியிட்டார்.

“கடுந்தொற்றுக்கால நடவடிக்கைகளாலும், மற்றைய நிலைமைகளாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவ முடிவுசெய்திருக்கிறது. அதே நேரம் நாட்டின் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் நடவடிக்கையாக வீட்டுத் தோட்டங்களை ஊக்குவிக்கவும் அரசு முடிவு செய்திருக்கிறது,” என்று அமைச்சர் பசில் ராஜபக்சே தெரிவித்தார்.   

நாட்டின் சூழலைப் பேணிக் காலநிலை மாற்றங்களுக்குத் தடைபோட அரசு எடுத்த நடவடிக்கைகளில் ஒன்றான செயற்கை உர இறக்குமதி, பாவிப்பு தடை நாட்டின் அறுவடையை சுமார் 30 – 40 விகிதத்தால் குறைக்கும் என்று கணிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால் விவசாயிகளின் விளைச்சலில் கிலோவுக்கு ரு 25 மேலதிகமாகக் கொடுக்கப்படும்.

சிறிய வீட்டுத் தோட்டங்களை வைத்திருப்பவர்களுக்கு ரூ 5,000 முதல் பெரிய தோட்டங்களை வைத்திருப்பவர்களுக்கு ரூ 20,000 உம் உதவித்தொகையாகக் கொடுக்கப்படும். அதன் மூலம் நீண்டகாலத் திட்டமாக மக்கள் தமது வீடுகளில் பயிர்களை விளைவிப்பதை ஊக்குவிக்க அரசு நோக்கமிட்டிருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

போரில் காயமடைந்த இராணுவத்தினருக்கும் ரூ 5,000 உதவித்தொகையாக வழங்கப்படும். அத்துடன் தனியார் துறை நிறுவனங்களும் தமது தொழிலாளர்களுக்கான சம்பளத்தை உயர்த்திக் கொடுக்கவேண்டுமென்று வர்த்தக அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அதே சமயம் சிறீலங்கா அரசு தனது தேவைக்கான நிதியுதவியை வேண்டி சர்வதேச நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி ஆகியவையுடனும் தொடர்பு கொள்ள அரசு முடிவெடுத்திருப்பதாக வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்