பால்டிக் நாடுகள் மூன்று ரஷ்ய எரிவாயுக் கொள்வனவை நிறுத்திவிட்டன.
ஏப்ரல் முதலாம் திகதி முதல் பால்டிக் நாடுகளான லித்தவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகியவை ரஷ்யாவிலிருந்து எரிவாயு வாங்குவதை முற்றாக நிறுத்திவிட்டதாக அறிவித்திருக்கின்றன. சோவியத் யூனியனின் பாகமாக இருந்த இந்த மூன்று நாடுகளும் மீண்டும் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே ரஷ்யா மீது அவநம்பிக்கை கொண்டவை.
லத்வியாவின் நிலக்கீழ் சுரங்க எரிவாயுக் கிடங்குகளில் பேணப்பட்டுவரும் எரிவாயுவே தற்போது மூன்று நாடுகளுக்கும் விநியோகம் செய்யப்படுகின்றன. சமீப வாரத்தில் ரஷ்யாவின் ஜனாதிபதி தம்மிடமிருந்து எரிவாயு கொள்வனவு செய்பவர்கள் ரூபிள் நாணயத்தில் கட்டணம் செலுத்தாவிடின் தொடர்ந்து அவர்களுக்கு எரிவாயு விற்கப்படாது என்று மிரட்டியதைத் தொடர்ந்தே பால்டிக் நாடுகள் மேற்கண்ட முடிவை எடுத்திருப்பதாக லித்வேனிய ஜனாதிபதி கித்தனாஸ் நௌசேடா தனது வானொலி உரையொன்றில் தெரிவித்தார்.
“ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து எங்களை முழுவதுமாக விடுவித்துக் கொள்ளவேண்டும் என்பது பல வருடங்களுக்கு முன்னரே நாம் தீர்மானித்த விடயமாகும். அதன் பலனாகவே இன்று நோவெதுவுமின்றில் இந்த முடிவை நாம் எடுக்க முடிந்திருக்கிறது. எங்களால் முடியுமானால் மற்றைய ஐரோப்பிய நாடுகளாலும் அது முடியக்கூடிய காரியமே,” என்று குறிப்பிட்டு அவர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ரஷ்யாவிடம் எரிபொருள் கொள்வனவு செய்வதை நிறுத்தும்படி அறைகூவியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்