ஆப்கானிஸ்தான் ஷீயா முஸ்லீம் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு, 10 பேர் மரணம்.
ஆப்கானிஸ்தானின் வடக்கிலிருக்கும் மஸார் எ ஷெரிப் நகரில் ஷீயா முஸ்லீம் மார்க்கத்தைச் சேர்ந்தவர்களின் பள்ளிவாசலில் தொழுகை நேரத்தில் குண்டொன்று வெடித்தது. சுமார் 10 பேர் இறந்திருப்பதாகவும் 40 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் நகர மருத்துவமனை குறிப்பிட்டிருக்கிறது.
இதே வியாழக்கிழமையன்று தலைநகரான காபுலில் வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்திருக்கிறது. அதுவும் ஷீயா மார்க்கத்தினர் வாழும் பகுதியாகும். அக்குண்டு வெடிப்பில் இரண்டு குழந்தைகள் காயமடைந்தார்கள் என்று காபுல் பொலீஸ் அதிகாரம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
அதே பகுதியில் இவ்வார ஆரம்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குண்டுகள் வெவ்வேறிடங்களில் வெடித்தன. இறந்தவர்கள் தொகை 6 பேராகும். மேலும் 17 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அவை அப்பகுதியில் இருக்கும் பாடசாலைகளைக் குறிவைத்திருந்ததால் பாதிக்கப்பட்டோர் பிள்ளைகளாகும்.
குறிவைத்துத் தாக்கப்படுவோர் ஆப்கானிஸ்தானின் சிறுபான்மையினரான ஹசாரா மக்களேயாகும். அவர்களைத் தாக்குவதில் தலிபான் ஆட்சியமைக்க முன்னர் தலிபான்களும் ஈடுபட்டு வந்தார்கள். தற்போது தாக்கியது யாரென்று எவரும் பொறுப்பெடுக்காவிடினும் கூட அதற்குப் பின்னாலிருப்பது ஐ.எஸ் என்றழைக்கப்படும் சுன்னி முஸ்லீம் காலிபாத் அமைக்கப் போராடும் இயக்கத்தின் ஆப்கானியக் கிளையான ஐ.எஸ் கொரோசான் என்றே கருதப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்