வியாழனன்று பிளாட்டினம் விழா ஆரம்பம்; மின்னல்களைத் தாண்டிக் கீழிறங்கிய மகாராணியின் விமானம்.
முடியேந்தி ஐக்கிய ராச்சியத்தின் ஆட்சிக்கட்டிலில் 70 வருடங்கள் இருக்கும் மகாராணி எலிசபெத் II சில நாட்கள் தனது பல்மொரல் மாளிகையில் தங்கிவிட்டு விண்ட்சருக்குத் திரும்பியிருப்பதாக பக்கிங்காம் மாளிகை தெரிவித்தது. லண்டனின் வடக்கிலிருக்கு விமானப்படையின் விமான நிலையத்தில் இறங்கவிருந்த அவரது விமானம் கடுமையான வானிலையால் தாமதமாகியது.
எலிசபெத் மகாராணியில் 70 வருட ஆட்சி பற்றிய கொண்டாட்டங்கள் ஆரம்பித்தன. – வெற்றிநடை (vetrinadai.com)
“கடுமையான மின்னல்களால் மகாராணியின் விமானம் சுமார் 15 நிமிடங்களாக வானத்தில் வட்டமிடவேண்டியிருந்தது. பாதுகாப்புக்கு எவ்வித பங்கங்களும் ஏற்படாமல் அவர் அதன் பின்னர் பாதுகாப்பாக இறங்கி விண்ட்சர் மாளிகைக்குச் சென்றிருக்கிறார்,” என்று பக்கிங்காம் மாளிகை அறிவித்தல் வெளியானது.
வியாழனன்று ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை வரை லண்டனின் வெவ்வேறு இடங்களில் நடக்கவிருக்கும் கொண்டாட்டங்களில் 96 வயதான மகாராணி கலந்துகொள்வார். அவை மத்திய லண்டனில் பல்லாயிரக்கணக்கானோர் பங்குபெற நடக்கவிருக்கும் Trooping The Colour என்ற கோலாகலமான நிகழ்ச்சியுடன் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.
வியாழனன்று மாலையில் 2,000 நகரங்கள், கிராமங்களில் மகாராணியைக் கொண்டாடும் விளக்குகள் ஒளிரவைக்கப்படும். பக்கிங்காம் மாளிகைக்கு வெளியே 21.45 க்கு விளக்கு ஒளிரவைக்கப்படும். அதையடுத்து வெள்ளிக்கிழமையன்று புனித பவுல் ஆலத்தில் “நன்றி நவில்தல்” சேவை நடாத்தப்படும்.
சனியன்று மாலையில் பக்கிங்காம் மாளிகையில் சுமார் 22,000 பேர் பங்குகொள்ளும் விருந்தொன்று மகாராணியின் சார்பில் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது. அதைத் தவிர சர்ரே நகரிலிருக்கும் குதிரைப்பந்தாட்ட மைதானத்தில் குதிரைகள் ஓடும் போட்டி நடக்கவிருக்கிறது. இதுவரை மகாராணி தனது குதிரையொன்றின் மூலம் வெல்லாத பந்தயம் அது மட்டுமே. அவர் அங்கு சில சமயம் தோன்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால் அவருக்கு அங்கே குதிரைப்பந்தய வீரர்கள் கௌரவ மரியாதை செய்வார்கள்.
பிரபல இசைக்குழுவினரான Queen இன் இசைக்கச்சேரியொன்று அதன் ஆரம்பகாலக் கலைஞர் பிராயன் மே ஆல் பக்கிங்காம் மாளிகையின் கூரைத்தளத்தில் நடாத்தப்படும். அந்திரியா பொச்செல்லி, ஏதன் ஜோன், நைல் ரொட்ஜர்ஸ், அலிசியா கே, டுரான் டுரான், எல்ல எயர் உட்படப் பல பிரபல கலைஞர்கள் நிகழ்ச்சியில் தோன்றுவார்கள்.
வெஸ்ட்மினிஸ்டர் அபேயிலிருந்து பக்கிங்காம் மாளிகை வரையிலான மூன்று கி.மீ தூர விழா அணிவகுப்பு ஞாயிறன்று நடைபெறும். அதில் பிரிட்டிஷ் தேசிய சொத்துக்கள் என்று குறிப்பிடப்படும் 150 பேர் தோன்றுவார்கள். பொதுமக்கள் கலந்துகொள்ளும் அந்தப் பெரும் அணிவகுப்பும் அதன் கோலாகல நிகழ்ச்சிகளும் மகாராணியின் விழாவின் கடைசி நிகழ்ச்சியாக இருக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்