இயற்கை அழிவுகளின் சேதங்களுக்கு நிதியுதவி கோரிப் பாகிஸ்தான் நடத்திய நிகழ்ச்சி வெற்றி.
ஐக்கிய நாடுகள் சபையின் இயக்கத்தில் பாகிஸ்தான், நாட்டில் ஏற்பட்ட இயற்கை அழிவுகளின் சேதங்களை எதிர்கொள்ள நிதியுதவி கோரி மாநாடொன்றை ஜெனீவாவில் நடத்தியது. சுமார் 16.3 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அழிவுகள் ஏற்பட்டதாகக் கணிப்பிட்டதில் பாதியையாவதுச் சர்வதேச உதவி மூலம் பெறுவது பாகிஸ்தான் அரசின் நோக்கமாக இருந்தது. தாம் எதிர்பார்த்ததை விட அதிகமான நிதியுதவி தமக்கு உறுதியளிக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தானின் தகவல்துறை அமைச்சர் மரியம் ஔரங்கசீப் டுவீட்டினார்.
கோடைகாலத்தில் பாகிஸ்தானின் பல பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை அழிவுகளால் நாட்டின் மூன்றிலொரு பகுதி நீருக்குள் மூழ்கியிருந்தது. அதன் விளைவாகப் பலர் இறந்து, வீடிழந்து பாதிக்கப்பட்டதுடன் பெருமளவு விவசாயமும் அழிந்துபோனது. தொடர்ந்தும் அந்த அழிவிலிருந்து தப்ப முகாம்களுக்குச் சென்றவர்களில் ஒரு சாரார் தமது வழக்கமான வாழுமிடங்களுக்குச் செல்லமுடியாத நிலையிலிருக்கிறார்கள்.
அத்துடன் பாகிஸ்தான் கடந்த பல வருடங்களாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஜெனீவாவில் நடத்தப்பட்ட நிதியுதவி கோருதல் மாநாட்டுக்கு 40 நாடுகளின் பிரதிநிதிகளும், பல மனிதாபிமான அமைப்புகளும், தனியார் மற்றும் சர்வதேச நிறுவனங்களும் சமூகமளித்திருந்தன. அவர்கள் மூலமாக சுமார் 8.57 பில்லியன் டொலர்கள் நிதியுதவி உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி 4.2 பில்லியன், உலக வங்கி 2 பில்லியன், ஆசிய அபிவிருத்தி வங்கி 1.5 பில்லியன், ஐரோப்பிய ஒன்றியம் 93 மில்லியன், ஜேர்மனி 88 மில்லியன், சீனா 100 மில்லியன், அமெரிக்க உதவியமைப்பு 100 மில்லியன், ஜப்பான் 77 மில்லியன் டொலர்கள் நிதியுதவிகளை வழங்கியிருக்கின்றன.
பாகிஸ்தான் பிரதமர் சபாஸ் ஷெரிப், ஐ.நா வின் பொதுக் காரியதரிசி குத்தேரஸ் ஆகியோர் உதவியளித்தவர்களுக்குத் தமது நன்றியைத் தெரிவித்தார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்