சித்திரை புத்தாண்டு..!

பலர் தமிழ் புத்தாண்டு
சித்திரை மாதம்
என்கிறார்கள்….
சிலர் தை மாதம்
என்கிறார்கள்
என் பிறப்பு
ஏதுவாகவே
இருந்துவிட்டுப் போகட்டும்…

அந்நிய நாட்டு
ஆங்கில தேதியை
தலையில்
தூக்கி வைத்துக்
கொண்டாடும் நீங்கள்
சொந்த நாட்டு
தமிழ் தேதியை
கண்டுகொள்ளாமல்
இருப்பதுதான்
அறியாமையின் உச்சம்….

தமிழ் புத்தாண்டு
தை மாதம்தான் என்று
வரலாற்று சான்று காட்டி
மார்பபைத் தட்டிக்
கொள்பவர்கள் கூட
ஏனோ?
இரவு 12 மணிவரை
விழித்திருந்து
என்னை வரவேற்க
யாரும் தயாராக இல்லை…

இருப்பினும்
குடித்துவிட்டு
கும்மாளம் போட்டு
ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம் என்ற
பெயரில்
கலாச்சாரத்தை சீரழிக்கும்
ஆங்கில புத்தாண்டு போல்
என் புத்தாண்டு
இல்லாமல் இருப்பதை
நினைக்கும் போது
பெருமைப்படுகிறேன் ……

பட்டாசுகளை வெடித்து
காசை
கரியாக்குவதோடு
மட்டுமல்லாமல்
காற்றையும்
ஒளியையும் மாசுபடுத்தும்
மகா பாவத்தை
செய்யாமல் இருப்பதை
நினைக்கும்போது
என் பிறந்த நாளை
இரவில் கொண்டாடாமல்
இருப்பதே நல்லது என்று
தோன்றுகிறது….

சம்பளம்
என் தேதியில்
கொடுத்திருந்தால்
ஒருவேளை
என் பிறந்தநாளை
இரவில்
கொண்டாடி
இருப்பார்களோ
என்னவோ
பணம் என்றால்
பிணமும் வாயைத்
திறக்கும் என்பார்களே….!

தமிழர்களாய் இருந்தும்
தமிழ் மாதத்தை
எதற்கும்
பயன்படுத்தாமல் இருப்பது
உன் தன்மானத்திற்கு
கலங்கம் என்பதை
எப்போது
நீங்கள் உணரப்
போகின்றீர்கள்…….!

நீ பயன்படுத்தும்
காலண்டரில்
ஆங்கில மாதத்தேதிக்கு
அதிக இடத்தை ஒதுக்கி
பெரிதாக
மேலே போட்டுவிட்டு……
உன் தமிழ் மாதத்திற்கு
கடமைக்காக
கீழே சின்னதாக
இடம் ஒதுக்கி இருக்கிறாயே
இதுதான்
உன்னைப்
பெற்றெடுத்த எனக்கு
நீ செய்யும்
நன்றிக்கடனா …..?

இனி வரும் ஆண்டிலாவது
தமிழ் மாதத்தையே
தமிழ்நாட்டில்
முதன்மை தேதியாக
காலண்டரில் அச்சிட
ஆணையிடு….

அனைவருக்கும்
சம்பளம் வழங்கப்படும் தேதி
தமிழ் மாதம்
முதல் தேதி தான் என்றச்
சட்டத்தை
சட்டமன்றத்தில் -ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்று…

அனைத்து வரிகளும்
தமிழ் மாதம்
முதல் தேதியில் தான்
செலுத்த வேண்டும் என்று
கட்டளையிடு …….

வீட்டு வாடகை முதல்
கடை வாடகை வரை
அனைத்து வாடைகளும்
தமிழ் மாதம் முதல்
தேதியில் தான்
வாங்க வேண்டும் என்று கடுமையான சட்டம் போடு…

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா என்று
சொன்னால் மட்டும்போதாது
நீ என்று
தலை நிமிர்ந்து
நிற்கப் போகிறாய்?

ஒன்றை மட்டும்
நன்றாக
நினைவில் வைத்துக்கொள்
நான் அழிந்தால்
நீ தானாகவே
அழிந்து விடுவாய்….??? கவிதை ரசிகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *