சபாநாயகர் கலைத்த பாகிஸ்தான் பாராளுமன்றத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு அழைத்தது உச்ச நீதிமன்றம்.
தனது ஆளும் கூட்டணிக்குப் பெரும்பான்மையை இழந்த பாகிஸ்தான் பிரதமர் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நேரிடாமல் தவிர்க்க பாராளுமன்றத்தையே தன் சபாநாயர் மூலம் கலைத்துவிட்டார். அந்த நகர்வு நாட்டின் அரசியலமைப்புச் சாசனத்துக்கு முரணானது என்று குறிப்பிட்டுத் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
பாராளுமன்றத்தைக் கலைக்கும்படி இம்ரான் கான் ஜனாதிபதியிடமும் கோரியிருந்ததை அடுத்து ஜனாதிபதி ஆரிப் அல்பியும் அதைச் செய்ததாக அறிவித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர்களிடையே தமது கூட்டணியால் ஒரு பெரும்பான்மை அரசை உண்டாக்க முடியும் என்று குறிப்பிட்டு வந்த எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி, சபாநாயகர் ஆகியோரின் முடிவுகள் தவறானவை என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருந்தன.
ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் பதியப்பட்ட வழக்குகளை விசாரித்த ஐந்து பேரைக் கொண்ட உச்ச நீதிமன்றம் ஒரே குரலில் பாராளுமன்றக் கலைப்பு நாட்டின் அரசியலமைப்புச் சட்டங்களுக்கு முரணான முடிவு என்று கூறியிருக்கிறது. நடந்த வழக்கில் இம்ரான் கான், சபாநாயகர், ஜனாதிபதி, அரசாங்கம், எதிர்க்கட்சிகள் ஆகியோரின் வழக்கறிஞர்கள் தமது வாதங்களை முன்வைத்தனர். தவிர, நீதிபதிகள் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சாட்சிகளாக விசாரித்திருந்தனர்.
ஏப்ரல் 9 ம் திகதி காலை பாராளுமன்றத்தைச் சபாநாயகர் மீண்டும் கூட்டவேண்டும் என்றும் அச்சமயத்தில் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.அந்த வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வியடையும் பட்சத்தில் புதிய ஒரு பிரதமர் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்